ஸ்ரீநகர்:

இந்தியா -பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவுது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத பிரச்னை காரணமாக பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை அழைப்பு விடுத்தும் இதற்கு சாதமான தீர்வு ஏற்படவில்லை. விளையாட்டு போட்டிகளில் இந்தியா அரசியலை கலக்குகிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.

‘‘எங்களுடன் இந்தியா விளையாட வேண்டும் அல்லது முன் திட்டமிடப்பட்ட போட்டிகள் தடை பட்டதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று பாகிஸ்தான் கோரி வருகிறது. இந்நிலையில் இந்தியா&பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என டோனி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் ஏற்பாடு செய்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட டோனி அங்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்களிடம் பேசுகையில், ‘‘இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்க முடியாது. விளையாட்டை தாண்டியும் பல விஷயம் உள்ளது. எனவே, இருநாடுகள் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறுவது தொடர்பாக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.