சென்னை:

மிழகத்தில் காவிரி பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை, மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன்,  விவசாயிகள் போராட்டம், பல்கலைக்கங்களுக்கு வேறு மாநிலத்தை சேர்ந்த துணைவேந்தர்கள் நியமனம் போன்ற சர்ச்சைகளால்  தினசரி போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதிக்கு அழைத்து செல்ல முயன்ற விவகாரமும் பூதாகரமாக வெடித்துள்ளது. இது குறித்து விசாரணை செய்து அறிக்கை தரும்படி தன்னிச்சையாக கவர்னர் பன்வாரிலால்  விசாரணை கமிஷன் அமைத்துள்ளார்.

இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,  மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லப்பாவை சென்னை வரவழைத்து விளக்கம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து மதுரை பல்கலைக்கழம் அமைத்த விசாரணை கமிஷன் கலைக்கப்படுவதாக துணைவேந்தர் செல்லப்பா அறிவித்து உள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்கள் உள்பட பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாலை 5.30 மணிக்கே செய்தியாளர்கள் ராஜ்பவன் வந்துவிடும்படியும் அதில் கோரப்பட்டுள்ளது.