உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்: ஸ்டாலின்

சென்னை:

ச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆளுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று திமுக செயல்தலை வரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

டில்லியில் ஆத்ஆத்மி கட்சி ஆட்சிக்கும், மாநில அரசுக்கும் இடையே நடைபெற்று வந்த அதிகார மோதல் காரணமாக மாநில வளர்ச்சி தடை பெற்ற நிலையில், யாருக்கு அதிகாரம் என்று தொடரப்பட்ட வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் என்று உச்சநீதி மன்றம் அதிரடியாக தீர்ப்பு கூறி உள்ளது.

இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டு மென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முழுஅதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும், குறிப்பாக தமிழக ஆளுநர் இதனை நன்கு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மாநில அரசு உயிரோடு இருந்தும், செயலற்ற நிலையில் இருந்து வருவதால், ஆளுநர் பன்வாரிலால் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு அதிகாரிகளை சந்தித்து அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

இதற்கு திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கருப்புகொடி காட்டியும் வரும் நிலையில், ஆளுநரை எதிர்த்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்று ஆளுநர் மாளிகை மிரட்டி வருகிறது.

இந்த நிலையில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு  இன்று வழங்கிய அதிரடி தீர்ப்பு அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் சவுக்கடி என்று விமர்சிக்கப்படுகிறது.