சென்னை:

பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிக் கொடுத்த ஆளுநரின் செயல் ஏற்புடையதல்ல என்றும், பொது வாழ்வில் இருப்போர் கண்ணியத்தையும்,நாகரிகத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மாநிலங்களவை உறுப்பினர்  கனிமொழி கருத்து தெரிவித்துள்ளனர்.

ராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறானச் செயலுக்கு அழைப்பது தொடர்பான ஆடியோவில், கவர்னர் மாளிகையும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கவர்னர் பன்வாரிலால்  அவசரம் அவசரமாக  தன்னிச்சையாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்தார்.

இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்,  நேற்று  சென்னை ஆளுநர் மாளிகையில்  செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை கவர்னர் பன்வாரிலால் தட்டினார்.  இது அங்கிருந்த பத்திரிகையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் செயலுக்கு இந்தியா முழுவதும் உள்ள சக பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கவர்னரின் அத்துமீறிய அநாகரி செயல் குறித்து,   திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொதி  ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆளுநரின் செயல்  துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல; அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்குத் துளியும் ஏற்புடையது அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

அதுபோல  கனிமொழி எம்.பி. தனது பேஸ்புக் பதிவில், நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரிகத்தை யும் கடைப்பிடிப்பது அவசியம். பெண் பத்திரிகையாளரின் அனுமதி இல்லாமல் அவரைத் தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்து, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை என்று பதிவிடுள்ளார்.