சென்னை:

மிழகத்தில் அரசு பணிகளில் வேலை வாய்ப்புகளை பெற தமிழக அரசு நடத்தும் அரசு தேர்வுகளில் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தினசரி புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எந்தவித முறைகேடும் இன்றி அரசு வேலை பெற உருவாக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி, டிஆர்பி ஆணையங்களிலேயே ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்4, குரூப்-2 (TNPSC) முறைகேடுகள் வெளி வந்து மக்களியே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணயத்திலும் (TNUSRB), முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.  தற்போது டிஆர்பி (TRB) எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது விசாரணையில் வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎஸ் குரூப்4 மட்டுமின்றி குரூப்-2 தேர்வில் முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக  டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுளிலும் முறைகேடுகள் நடைபெற்று இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகாரணமாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில்,   டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாகவும்  8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தேர்வு முறைகேடு களுக்கு புரோக்கராக  செயல்பட்ட ஜெயக்குமாரை சிபிசிஐடி காவல்துறையினர் வலைவீச தேடி வரும் நிலையில், மற்றொரு புரோக்கரான சித்தாண்டியை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர் மீது, கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில, தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணயம் சார்பில்  நடத்தப்பட்ட தேர்வு மற்றும்  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்ததுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணயம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதற்கான முடிவுகள்  சமீபத்தில் வெளியாகின. இதில், தேர்வுக்கான அழைப்புப் பட்டியலிலேயே இடம்பெறாத கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவரின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெறது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல  வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிகரம் தொடு என்ற பயிற்சி மையத்தில் பயின்றவர்கள், பலர் முறைகேடாக தேர்ச்சி பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.  இடைத்தரகர் ஜெயக்குமார் பல ஆசிரியர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான, ஜெயக்குமார் உள்பட  பலரின் வங்கி கணக்குகளை சிபிசிஐடி போலீசார் முடக்கியுள்ளனர். விசாரணையில்  டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு செய்யும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஜெயக்குமார் செல்போன் பயன்படுத்தாமல் எச்சரிக்கையுடன் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல், நான்கு இடைத்தரகர்களை தன்னுடன் வைத்து கொண்டு அவர்கள் மூலமாகத்தான் இந்த முறைகேட்டில் ஜெயக்குமார் ஈடுபட்டார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விவகாரத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த இடைத்தரகர்கள் என 8 நபர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிழக அரசு பணிகளுக்கு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu public service commission-TNPSC) காவல்துறையினர் பணிகளுக்கு தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Uniformed services recruitment board -TNUSRB), ஆசிரியர் பணிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் (Teachers Recruitment Board) போன்ற ஆணையங்களை ஏற்படுத்தி தமிழக அரசு பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது.

ஆனால், இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் தற்போது கேலிக்குறியதாகவும், கேள்விக்குறியதாகவும் மாறி உள்ளன.

டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த முன்னாள் காவல்துறை அதிகாரி நட்ராஜ் ஐபிஎஸ் ஓய்வு பெற்ற பிறகு, டிஎன்பிஎஸ்சியில்  நடைபெற்ற அனைத்து நியமனங்களிலும் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன….

இந்த மாபெரும் முறைகேட்டில் மாநில அரசுக்கும், அமைச்சர்களுக்கும்  தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது…

இந்த ஆணையங்களின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் பணி அமர்த்தப்பட்டவர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், மீண்டும் எந்தவித முறைகேடும் நடைபெறாத வகையில் வெளிப்படையான முறையில்  தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்…

எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள், தாங்கள் நிரபராதிகள் என நிரூபிக்க வேண்டுமானால், இந்த மாபெரும் ஊழலுக்கு காரணமான மூத்த அதிகாரிகள், அரசியல்வாதிகள், அமைச்சர் களை  உடனே பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்… இல்லையேல்…  2021ம்ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற  தேர்தல் அதிமுகவுக்கு சாவுமணி அடித்து விடும் …..

என்ன செய்யப்போகிறது எடப்பாடி அரசு… எப்போதும் போல மவுனமாக இருந்து விடுமோ….