மதுரை:

மிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் தெரிந்தவர்களையே பணியமர்த்த வேண்டும் என்று உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சதர்ன் ரெயில்வே பதில் அளிக்க  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சமீபத்தில் தமிழ் தெரியாத ரயில்வே ஊழியர்களால்  மதுரை அருகே விபத்து நடைபெற இருந்தது கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  மதுரையை சேர்ந்த மணவாளன் என்பவர்  மதுரை உயர்நீதி மன்ற கிளையில், தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பணியாற்றும் 15 முதல் 20 சதவீத ரயில்வே ஊழியர்கள் தமிழ் தெரியாதவர்களாக உள்ளனர். அண்மையில் கள்ளிக்குடி – திருமங்கலம் இடையே எதிர் எதிர் திசையில் ரயில்கள் சென்ற சம்பவம் நிகழ, மொழி பிரச்னையே காரணம் என கூறப்படும் நிலையில், திருச்சி மண்டலத்தில் பணியாற்றும் 2,145 கார்டுகளில் பெரும்பாலானவர் களுக்கு தமிழ் தெரியவில்லை. எனவே தமிழகத்தில் ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், கார்டுகள் உள்ளிட்ட முக்கிய ரயில்வே பணிகளில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையை தொடர்ந்து, மனுகுறித்து  தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.