உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பில்லை? : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கட் அவுட்!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கட் அவுட் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த (2017ம்) வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்‌ஷன குமாரி என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள் மற்றும் கட் அவுட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், கடந்த வருடம் அக்டோபர் மாதம், இவ்வழக்கில் தீர்ப்பளித்தார்.

அதில், “ பேனர்கள் மற்றும் கட் அவுட்களில் உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் இல்லாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் உத்தரவிட்டார்.

மேலும், “கட்டடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் தேவையில்லாமல் கட் அவுட்கள் வைப்பதைத் தடுக்க வேண்டும்.  போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்” என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், 1959-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தவெளி விளம்பரப்படுத்துதல் சட்டத்தை அவ்வப்போது புதுப்பிக்கவும் அரசுக்கு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்..

இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையைஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் இவர் சண்டிகர் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரை வரவேற்று வைக்கப்பட்ட கட்அவுட் என்று முகநூலில் பலரும் இந்தப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே கட் அவுட் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.