சென்னை:

சிரியர்கள் பணிக்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில் பயோமெட்ரிக் முறை வருகை பதிவேடை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில், வழக்கை தள்ளுபடி செய்த  உயர்நீதி மன்றம், வழக்கு தொடுத்த ஆசிரியருக்கு கடுமையான கண்னத்தை தெரிவித்து.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகம் செய்து, 2018 அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  நாகர்கோவிலைச் சேர்ந்த அன்னாள் என்ற அரசுப் பள்ளி ஆசிரியை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை நீதிபதி எஸ் எம் சுப்பிர மணியம் விசாரித்து இன்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில், அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைப்பதிவை உறுதி செய்யவே பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்ந்த ஆசிரியரை கடுமையாக கண்டித்த நீதிபதி, இதுபோன்ற  ஆசிரியர், எப்படி மாணவருக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியும் என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும்,  இந்த உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால் தான் பயோமெட்ரிக் வருகைப்பதிவு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும், இந்த அரசாணையை விரைந்து அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, கல்வித்துறையில் ஊழல் அதிகரித்து வருவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சரிப்பார்க்க வேண்டும் எனவும், ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

தன்னுடைய அடிப்படை உரிமை பாதிப்பதாக மனுதாரர் கருதினால், பணியில் இருந்து அவர் விலகி கொள்ள வேண்டும் என்றும், அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கை களையும், பணி விதிகளையும் பின்பற்றி தான் ஆக வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதிக சம்பளம், உட்கட்டமைப்பு வசதிக்காக அரசு அதிக அளவில் நிதியை செலவு செய்யும் நிலையில் போதுமான தேர்ச்சி விகிதத்தை காட்டாததால் அரசு பள்ளியின் மீது பெற்றோர் நம்பிக்கை இழந்து விட்டனர் எனவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.