“தி இந்து பொய்ச்செய்தி!”: இலங்கை தமிழர் கண்டனம்

 

எம்.ஏ.சுமந்திரன்

டந்த இரண்டு நாட்களாக இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

கொழும்புவில் இருந்து வெளியாகும் தி இந்து நாளிதழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்ய நடந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக  செய்தி வெளியாகி இருந்தது.

அதாவது இந்த கொலைச் சதியை விடுதலைப்புலிகள் செய்ததாக அர்த்தப்படுத்தி இருந்தது.

இது இலங்கைத் தமிழரிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

“விடுதலைப்புலிகளை முற்றிலும் ஒடுக்கிவிட்டதாக இலங்கை அரசு அறிவித்து சில வருடங்களாகி விட்டன. முன்னாள் புலிகளிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை. தவிர தற்போது ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்துக்கிடக்கிறார்கள்.

இந்த நிலையில், அவர்கள் யாரைக் கொல்ல திட்டமிடப்போகிறார்கள்” என்று பிரபல வழக்கறிஞரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தி இந்து பொய்ச்செய்தி வெளியிட்டிருப்பதாக கண்டனமும் தெரிவித்துள்ளார்.

இவரைப்போலவே இலங்கைத் தமிழர் பலரும் தி இந்து நாளேட்டுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அவர்கள், “விடுதலைப்புலிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசைவிட முனைப்பாக இருந்தது தி இந்து. தற்போது புலிகள் இயக்கமே இல்லை” என்று கூறும் அவர்கள்,

”புலிகள் பெயரைச் சொல்லி தமிழர்களை மேலும் ஒடுக்கியது இலங்கை அரசுகள். தற்போது தமிழர்க்கு சில உரிமைகளை அளிக்க தற்போதைய இலங்கை அரசு முனைந்திருக்கிறது.

இந்த நேரத்தில் புலிகளைப் பற்றி பொய்யாக எழுதி, சிங்கள மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்த தி இந்து திட்டமிட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவிக்கின்ற னர்.