நீதிபதி குரியன் ஜோசப்

டில்லி:

ச்சநீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகள் நியமனம் செய்ய  கொலீஜியம் பரிந்துரையை செயல்படுத்த தாமதம் செய்யும் மத்திய அரசை வரலாறு மன்னிக்காது என்று நீதிபதி குரியன் ஜோசப் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சமீபகாலமாக உச்சநீதி மன்ற செயல்பாட்டில் மத்தியஅரசு தலையிடுவதாகவும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாகுபாடுகாட்டுவதாகவும் சக நீதிபதிகள் 4 பேர் பகிரங்கமாக குற்றம் சாட்டிய நிலையில், தற்போது நீதிபதிகள் நியமன விவகாரத்தில், நீதிபதி குரியன் மத்திய அரசை வரலாறு மன்னிக்காது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

உத்தரப்பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் கடந்த ஜனவரி 10-ம் தேதி பரிந்துரை செய்தது.

இதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் காலம் தாமதம் செய்யப்படுவதை கண்டித்து நீதிபதி குரியன்   தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் 22 நீதிபதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  இந்த நியமனங்களை செயல்படுத்துவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க 7 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் தாமத நடவடிக்கைக்கு நீதிமன்றம் உரிய பதிலளிக்காவிட்டால் வரலாறு மன்னிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.