ஈரோடு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் மே மாதம் 10ந்தேதி சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்து உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மெரினாவில் மே 10ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்,  காவல்துறை அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த வாரம், சென்னை உயர்நீதி மன்றத்தில், அய்யாக்கண்ணு சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

அந்த வழக்கில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு உயர்நீதி மன்ற தனி நீதிபதி அனுமதி அளித்த நிலையில், உடனே காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதால், அந்த ஒருநாள் போராட்டத்துக்கும் சென்னை உயர்நீதி மன்ற அமர்வு தடை விதித்து விட்டது.

இந்நிலையில், காவல்துறை அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும், மே 10தேதி மெரினாவில் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என  விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்து உள்ளார்.