ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது:சோனியா

ராய்பூர்:
”நாட்டின் ஜனநாயகத்தில், சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது,” என, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூறினார்.

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், இப்போதுள்ள தலைநகர் ராய்பூர் அருகே, புதிய ராய்பூர் என்ற பெயரில், புதிய தலைநகரம் உருவாக்கப்பட்டு வருகிறது. அங்கு புதிய சட்டசபை கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

இதையொட்டி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, ‘வீடியோ’ வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க, கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் நடந்து வருகின்றன. சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகளுக்குப் பின், நாட்டின் அரசியல் அமைப்பு சட்டமும், ஜனநாயகமும் ஆபத்தில் இருக்கும் என, அவற்றை உருவாக்கிய நம் முன்னோர், கற்பனை செய்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். நாட்டில் இப்போது, மோசமான சிந்தனை ஆதிக்கம் செலுத்துகிறது, கருத்துச் சுதந்திரம் ஆபத்தில் உள்ளது. ஜனநாயக அமைப்புகள், மதிப்பை இழந்து வருகின்றன.

ஒற்றுமையின்றி, மக்கள் சண்டை போட்டு கொள்ள வேண்டும் என, தேச விரோத, ஏழை விரோத சக்திகள் விரும்புகின்றன. இதனால், மக்கள் மனதில் வெறுப்பு என்ற நஞ்சை ஏற்றி வருகின்றன. நம் பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர். தங்களது வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும் என, அவர்கள் விரும்புகின்றனர்.நாட்டின் ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க நாம் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு, சோனியா கூறினார்.