சென்னை:

மிழகத்தில் காலியாக உள்ள   4சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு, வாக்குப் பதிவின்போது  நடுவிரலில் ‘மை’ வைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

பொதுவாக தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு, அவர்கள் வாக்களித்துள்ளதை உறுதி செய்யும் வகையில்  இடது கையின் ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்படுவது வழக்கம்.

ஆனால்,  ஏப்ரல் 18 ம் தேதி மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்திருப்பதால், அவர்களின் விரலில் அடையாள மை வைக்கப்பட்டிருக்கும். எனவே,  மே 19 ம் தேதி  வாக்குப் பதிவு நடைபெறும்  4 தொகுதிகளில் வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்களித்தை உறுதி செய்யும் வகையில் அவர்களின் நடுவிரலில்  அடையாள மை வைக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், வழக்கு காரண மாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தவிர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி, நாடாளுமன்ற தேர்தலுடன் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால், 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதற்கிடையில்,
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய வழக்குகளும்  வாபஸ் பெறப்பட்டன. இந்த நிலையில், சூளூர் அதிமுக  எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார். இதனால், அந்த தொகுதியும் காலியானது.

இந்த நிலையில், காலியாக இருக்கும் 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 19-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

மே 23-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகளுடன் மேற்கண்ட 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.