மருத்துவப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் மோடி அரசின் அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது! கே.எஸ்.அழகிரி

சென்னை: மருத்துவப்படிப்பில் 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதை தர  மறுக்கும் மோடிஅரசின் அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும்,  மற்ற பிரிவினரிடமிருந்து பறித்து பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மத்தியஅரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே. எஸ். அழகிரி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய உயர்நீதி மன்றமே தீர்ப்பளித்த பிறகும் அந்த தீர்ப்பை செயலற்றதாக ஆக்கும் வகையில் மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்திருப்பது இடஒதுக்கீட்டுக்கு எதிரானது. இதன் மூலம் மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்து உறுதியாக கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்திருக்கிறது.
ஏற்கனவே, நீட் தேர்வினால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய மத்திய பாஜக அரசின் போக்கு வங்கித்துறைகளிலும் நடைமுறைப்படுத்தியிருப்பது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கொண்டு வந்தபோது, இது ஏற்கனவே இட ஒதுக்கீடு பெற்று வரும் மற்ற பிரிவினரைப் பாதிக்காது என்று கூறப்பட்டது.
ஆனால், சமீபத்தில் ‘ஐபிபிஎஸ்’ எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பிற பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து எடுத்து, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நடைமுறையில் எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. தற்போது 13 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எஸ்.டி., பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்குப் பதிலாக, 6 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 21 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான 50 சதவீதம் 40.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மட்டும் 10 சதவீதமாகவே தொடர்கிறது.
மற்ற பிரிவினரிடம் இருந்த இட ஒதுக்கீட்டை, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்குப் பறித்துக் கொடுத்தால், அது அரசியல் சாசனத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
கடந்த ஆண்டு ஸ்டேட் வங்கிப் பணியாளர் நியமனத்தில், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அப்போது, மற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடுகளில் கை வைக்கவில்லை. பொதுப் பிரிவில் மட்டும் குறைக்கப்பட்டது.
தற்போது வங்கிகளில் காலியாகவுள்ள 1,417 இடங்களுக்கு ஆட்களை நிரப்ப வேண்டும். அந்த வகையில் பிற பின்தங்கிய வகுப்பினருக்கு 300 இடங்களும், எஸ்.சி., பிரிவினருக்கு 196 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 89 இடங்களும் மட்டுமே கிடைக்கும். பொதுப் பட்டியலில் வருவோருக்கு 690 இடங்கள் கிடைக்கும். அதேசமயம், 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 142 இடங்கள் கிடைக்கும் என்பதுதான் விநோதம்.
பிற பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்டி., பிரிவினரிடமிருந்து 142 வங்கிப் பணியிடங்களை எடுத்து, உயர் சாதியினருக்கு மத்திய பாஜக அரசு வழங்குகிறது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி அரசு அவசர, அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இந்த அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.