மதுரை,

மிழக முதல்வர் குறித்து ஆபாசமாக கார்டூன் வரைந்ததாக கைது செய்யப்பட்ட  கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அரசை விமர்சித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நெல்லை கலெக்டர், நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை நிர்வாணமாக சித்தரித்து  கேலிச்சித்திரம் வரைந்து, அதை முகநூலில் வெளியிட்டதால், கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக அரசு தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கார்டூனிஸ்ட் பாலா  மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,  கந்துவட்டி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து குடும்பத்தினர் அக்டோபர் 23 -ம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கேலிச் சித்திரம் ஒன்றை வரைந்து அக்டோபர் 24 -ம் தேதி எனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன்.

இந்தக் கேலிச்சித்திரம் தொடர்பாக, அக்டோபர் 31 -ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் என் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 -இன் படி வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நவம்பர் 5 -ம் தேதி சென்னைக்கு வந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் என்னை கைது செய்தார். தற்போது நான் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளேன்.

நான் எவ்வித குற்றச்செயலிலும் ஈடுபடாத நிலையில், என் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது தவறு. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. எனவே என் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையை தொடர்ந்து,  கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு விசாரணையை மேற்கொள்ள நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.