Random image

பாஜவை விமர்சித்த விவகாரம்: சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

சென்னை:

பாஜக-விற்கு எதிராக விமானத்தினுள்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்னிலையில்  கோஷமிட்டு வாக்குவாதம் செய்ததாக கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

மாணவி சோபியா

நேற்று தூத்துக்குடி சென்ற விமானத்தினுள்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றுகொண்டிருந்தார். அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற மாணவி,  ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என கோஷமிட்டார். தொடர்ந்து விமானத்தில் முழக்கமிட்ட படியே வந்துள்ளார்.  இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, விமானம் தூத்துக்குடி வந்து தரையிறங்கியதும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டார். பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்ததின் பேரில் சோபியா மீது  மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு  15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று சோபியா சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதி மன்றம், சோபியாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.