அரசு ஊழியர்கள் போராட்டம் ஜனவரி 7-ந் தேதி வரை ஒத்திவைப்பு

சென்னை:

ரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ, ஜியோ போராட்டம் ஜனவரி 7ந்தேதிக்கு  ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டு என்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, நீதிமன்றத்தில் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்  ஜாக்டோ ஜியோ தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே புதிய பென்சன் திட்டம் குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஸ்ரீதர் குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தும் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந் தேதிக்குள் அறிக்கை   தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதி மன்ற விசாரணையை தொடர்ந்து. ஜாக்டோ-ஜியோ அவசர உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், மகேந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது,  அடுத்த மாதம் (ஜனவரி) 7-ந் தேதி வரை போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர்.  புதிய பென்சன் திட்டம் குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை தாக்கல் செய்தும், அரசு இன்னும் அறிக்கை வெளியிடவில்லை. இருப்பினும் 21 மாத நிலுவை தொகை வழங்க அரசு தயாராக உள்ளதாக தெரிகிறது. எங்களை பொறுத்தவரை அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.

உயர்நீதி மன்ற உத்தரவுக்கு பின்பு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். கோர்ட்டுமீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.