நீதிபதிக்கே மிரட்டலா? என்ன நடக்குது? எடப்பாடிக்கு முதல்வர் பதவி எதற்கு? ஸ்டாலின் ஆவேசம்

சென்னை:
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்கச் சென்ற மாவட்ட நீதிபதியை காவல்துறையினர் மிரட்டிய சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்களே!  என்ன நடக்கிறது? எடப்பாடிக்கு முதல்வர்பதவி  என்று காட்டமாக  கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபரிகளான தந்தை-மகன், காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய காவல் ஆய்வாளரும் அங்கு நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், உயர்நீதி மன்றம் மதுரை கிளையின் உத்தரவின்படி,  இது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்திய  நீதித்துறை நடுவரை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.  இதையடுத்து, உயர்நீதி மன்றத்தின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சாத்தான்குளம் காவலர் மகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும்  தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட தகவல் வெளியானது.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி! என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு?
இவ்வாறு கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி