திப்பு ஜெயந்தி ரத்து: அரசு மறுபரிசீலனை செய்ய கர்நாடக உயர்நீதி மன்றம் உத்தரவு

பெங்களூரு:

ள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும் என்றும், இந்த ஆண்டு முதல், திப்பு ஜெயந்தி ரத்து செய்யப்படும் என்று  கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், திப்பு ஜெயந்தி ரத்து குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய கர்நாடக மாநில அரசுக்கு கர்நாடக உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, முதல்வராக இருந்த சித்தராமையா, திப்பு ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்து விழா நடத்தினார்.  நவம்பர் 10ம் தேதி, அரசு விழாவாக கர்நாடகத்தில் கொண்டாடப்பட்டது. இதற்கு அப்போது பாஜக உள்பட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

தற்போது, கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடைபெற்று வருவதால், திப்பு ஜெயந்தியை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. மேலும், பாடப்புத்தகங்களில் உள்ள திப்புசுல்தான் பற்றிய பாடங்களும் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பாஜக மாநில அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, நவம்பர் 10 ம் தேதி திப்பு ஜெயந்தியைக் கொண்டாடாததை மறு பரிசீலனை செய்யுமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஏற்கனவே திப்புஜெயந்தி தொடர்பான வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கருத்து  தெரிவித்திருந்த கர்நாடக உயர்நீதி மன்றம், திப்பு சுல்தான்,  சுதந்திர போராட்ட வீரரல்ல, அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட அரசர் மட்டுமே!  என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி