சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், ரஜினிக்கும்,  சசிகலாவுக்கு இடையேதான் போட்டி நிலவும், பாஜக குழப்பமான நிலையில் இருக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டிவிட் பதிவிட்டு உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்குவதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது என்று கூறியவர், கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன். அரசியல் மாற்றம் தேவை, கட்டாயம் நிகழும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதையடுத்து கட்சியின்   தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி மற்றும் கட்சியின் மேற்பார்வையாளரை தமிழருவி மணியன் ஆகியோரை ரஜினிகாந்த் நியமித்துள்ளார். ரஜினியின் அறிவிப்பிற்கு அரசியல் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  ரஜினியின் அறிவிப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கு இடையே போட்டி நிலவும் என்றும் பாஜக குழப்பமான நிலைக்கு செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.