கொரோனா பரவல் நிலையை கண்டறிய தமிழகத்தில் 5 மண்டலத்தில் ஆய்வகம் அமைகிறது

சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவலின் நிலையை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கண்டறியும் ஆய்வுக்கு 5 மண்டலங்களில் ஆய்வகம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இது முடிந்தவுடன் மாதிரிகள் சேகரிக்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதாக என்பதை கண்டறியும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. முதல்கட்ட ஆய்வு சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12 ஆயிரத்து 405 மாதிரிகளை சோதனை செய்ததில் 2673 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது.

இதன்படி 21.5 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது கட்ட ஆய்வில் சென்னையில் 421, கோவையில் 428, திருவண்ணாமலையில் 410 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இதில், சென்னையில் 141 (33.4 சதவீதம்), கோவையில் 31 (7.2 சதவீதம்), திருவண்ணாமலையில் 35 (8.5 சதவீதம்) பேருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்து. இந்நிலையில் தமிழக அரசு இதுபோன்ற ஆய்வை நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 30 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான ஆய்வகம்் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா பரவல் தொடர்பாக தமிழகத்தில் 30 ஆயிரம் மாதிரிகள் சேரிக்கப்பட்டு ஆன்பாடி முறையில் சோதனை செய்யப்படும். இந்த ஆன்பாடிகள் கொண்டு ஒருவரின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்படும். இந்த அளவை கொண்டு கொரோனா பாதிப்பின் நிலைமை கண்டறியப்படும். இதற்காக 5 மண்டலங்களில் ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த ஆய்வகம் அமைக்கும் பணி இந்த வாரத்தில் நிறைவடையும். இதனைத் தொடர்ந்து மாதிரிகள் சேகரிப்பு பணி தொடங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.