தலைவா…! : ரஜினிக்கு ரசிகரின் பகிரங்கக் கடிதம்

‘தலைவா…

உங்க படம் ரிலீஸ் ஆகும் நாள் தான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் எல்லாமே. அப்படித்தான் நீங்க எங்களை வளர்த்தி வைச்சு இருக்கீங்க.

திரையில் உங்க முகத்தை முதன் முதலா காட்டும்போது, உடம்பில் இருக்கிற மொத்த சக்தியையும் ஒண்ணு சேர்ந்து ஒரு குரல் எழுப்பும் போதுதான், பிறந்த பலனை அடைஞ்ச திருப்தி எங்களுக்கு கிடைக்கும். அதே மாதிரித்தான் உங்க சண்டை, ஸ்டைல், பஞ்ச் டயலாக், காமெடி, சென்டிமென்ட், பாட்டு, டான்ஸ், கிளைமேக்ஸ் பைட்டுன்னு ஒவ்வொண்ணையும், ஒரு ‘புல் மீல்ஸ்’ சாப்பிடுவது போல ரசிச்சு ரசிச்சு பார்ப்போம்.

அதுக்கு இப்ப என்ன கண்ணா…ன்னு நீங்க கேட்கலாம்.

2017 வருஷத்தோட கடைசி நாளில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதியிலும் நாம போட்டியிடுவோம்’ன்னு நீங்க சொன்னதுக்கு அப்பறம் உலகமே உங்களைப் பத்தி பேசுது. (சமீபத்திலே மலேஷிய பிரதமர் கூட உங்க அரசியல் பத்தி பாராட்டி இருக்காரு). அதனால, நீங்க பேசினாலும், பேசாவிட்டாலும், ஒரு இடத்துக்கு போனாலும், போகாவிட்டாலும், நீங்க படம் நடிச்சாலும், நடிக்காம ஓய்வு எடுத்தாலும்… இவ்வளவு ஏன், நீங்க உச்சா… போனா கூட அவர் எப்படி 5 தடவை போலாம்கிற அளவுக்கு ‘கழுகுபார்வை’ பார்த்து உங்களை விமர்சனம் பண்றாங்க.

உங்க மேலே ஒரு விமர்சனம்னா அது எங்களை பாதிக்குது. நீங்க அதுக்கு பதில் சொல்லாட்டியும் நாங்க சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, கொஞ்ச காலமாகவே நாங்க சிரமப்பட்டுகிட்டு இருக்கோம்.

டிவி, மீடியாக்கள்ல நீங்களே சிலரை அனுப்பி விளக்கமும் சொல்ல மாட்டேங்கறீங்க. இதனால், காலா ஆதரவாளர், ரஜினி ஆதரவாளர், எழுத்தாளர், டைரக்டர், நடிகர்ன்னு ஏதாவது பேர்ல ஒருத்தர் விவாதத்திலே, உக்கார்ந்து, ஏதேதோ சொல்றாங்க. அரசியல் கட்சிக்காரங்க மட்டுமல்லாது, டிவி நிகழ்ச்சியின் நெறியாளர்களும் நம்மளை (உங்களை) வைச்சு செய்யறாங்க.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, ‘காலா’வா எங்களைப் பார்க்க வந்திருக்கீங்க. நானும், என்னோட நண்பன் சுப்புவும் (அவன் உங்கள் ரசிகன் அல்ல) அதிகாலையில் எந்திரிக்க அலாரம் வைச்சு, அலாரம் அடிக்கறதுக்கு முன்னாலேயே எழுந்து. குளித்துவிட்டு படம் பார்க்கப் போனோம்.

வழக்கமான உற்சாகத்தோட வெடிபோட்டு, பால் அபிஷேகம் பண்ணி, வாத்தியங்கள் முழங்க தியேட்டருக்குள்ளே போனோம். உங்க பேர் வரும்போது வழக்கம்போல உற்சாகம் கொப்பளிக்க சத்தம் போட்டோம். நிலம், உரிமைன்னு என்னவோ கார்டூன் படம் மாதிரி போட்டு டைட்டில் ஓடிச்சு.

அதெல்லாம் நமக்கு எதுக்கு… தலைவர் எப்ப அறிமுகமாவார்னு தான் பார்த்துட்டு இருந்தோம். 1980கள்ளே வர்ற மாதிரி குடிசைகளை இடிக்க வரும்போது, ஒரு குழந்தை ஓடிப்போய் ஹீரோகிட்ட சொல்லும். அவர் வந்து எதிரிகளை பந்தாடுவார். அதே மாதிரித்தான் படத்தை ரஞ்சித் ஆரம்பிச்சபோதே, சுப்பு கடுப்பாகிட்டான்.
‘என்னடா இது… அடுத்த சீன்லே மூணு அடி வாங்கிட்டுதான் தலைவர் பதிலுக்கு அடிக்கப் போறாரா’ன்னு கிண்டலா கேட்டான்.

‘டேய்… இது ரஞ்சித் படம்டா… கபாலி மாதிரி ‘மாஸ் ஓபனிங்’ இருக்கும் பாரு’ன்னு சொன்னேன்.

உடனே,    கிரிகெட் விளையாடுற காட்சியிலே நீங்க அறிமுகம். ‘டேய் பாலைப் போடறா’ன்னு உங்க குரல் கேட்டதும், உற்சாகமாய் விசில் அடிச்சு நாங்க ரெடியாக,  நீங்க ‘கிளீன் போல்ட்’ ஆனீங்க தலைவா.

இதுக்குன்னே காத்திருந்த சீனு, ‘என்ன கொடுமைடா இது. பைரவாவிலே விஜய்க்கு இப்படி ஒரு சீன் இருக்கு. இளைய தளபதி பிரிச்சு மேஞ்சிருப்பாரு. உங்க தலைவரு இப்படி மொக்கையாக்கிட்டாரே’ன்னு கமெண்ட் போட்டான்.

குழந்தைகளை சந்தோஷப்ப்டுத்த,  தலைவர் இப்படி பண்ணிட்டாருன்னு சொல்லித் தப்பிக்கலாம்னு பார்த்தால், அடுத்த ஷாட்டே  ‘அவுட் இல்லை… நோ பால்னு சொல்லு… வைட் ன்னு சொல்லு’ன்னு அழுகுணி ஆட்டம் ஆடற மாதிரி டயலாக் பேசறீங்க. ‘யார் நீங்க’ன்னு கேட்டு நீங்க அறிமுகமான அபூர்வராகங்களில் தொடங்கி கடைசியா வந்த கபாலி வரை இப்படி ஒரு மொக்கையான ஓபனிங் சீன் உங்களுக்கு யாருமே வைச்சது இல்லைன்னு மனசுக்குள்ளேயே நெனைச்சுகிட்டேன்.

சுப்பு ஏதாச்சும் கேட்டு விடுவனோன்னு பயத்தோட, ‘தலைவர் இப்ப அரசியல் களத்திலே இருக்காரு பா. அதனால, புதுசா சில விஷங்களை ரஞ்சித் மூலமா சொல்லப் போறாரு பாரு. நாங்க எல்லாம் இப்ப அரசியல்வாதியாகிட்டோமில்லே’ என்று நானே மெதுவாக சொல்லி வைத்தேன்.

அதுக்கு ஏத்த மாதிரி படம் முழுக்க நிலம், குடிசை, சேரி, குடியிருப்பு, அரசியல், போராட்டம், போலீஸ் ன்னு என்னென்னவோ வந்துச்சி. ‘வேங்க மவன் ஒத்தையா நிக்கறேன்’ காட்சியிலே பைட் இல்லேன்னு வருத்தமாச்சு. அதுக்கு பதிலா கொஞ்ச நேரத்திலே, ‘குடை பைட்’டிலே நீக்க அமர்க்களப்படுத்தி இருந்தீங்க.

‘ஆமா, இவரு யாரு’ன்னு அமைச்சரை நீங்க கடுப்பாக்கி பேசும்போது தியேட்டரே அதிர்ந்துச்சு தலைவா.
இடையிடையே சுப்பு பேச ஆரம்பிச்சப்ப, ‘நிறையா கருத்துகள் இருக்கு. படம் முடிஞ்சதும் இதைப்பத்தி பேசலாம்’னு சொல்லி அவன் வாயை அடைச்சிட்டேன்.

ஒரு வழியா படம் முடிஞ்சதும், வெளியே வரும்போதே சுப்பு விவாதத்தை ஆரம்பிச்சுட்டான்.‘நாடு முழுக்க இப்ப சுத்தமான இந்தியா, அனைவருக்கும் வீடு திட்டம், ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டம்னு மத்திய அரசு ஏதேதோ திட்டத்தை அறிவிச்சு இருக்கு. இது சம்மந்தமா எல்லா ஊரிலும் ஒரு வேலை நடக்குது. ஆத்தோரம், குளத்தோரம் இருந்த குடிசைவாசிகள் எல்லாம், அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு போங்கன்னு அரசாங்கம் அனுப்பி வைக்குது. 2022க்குள் வீடு இல்லாதவங்களே நாட்டிலே இருக்கக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்லுது. என்னைப் பொறுத்தவரை இதை நல்ல விஷயமாத்தான் பார்க்கறேன். ஆனால், நீங்க தாராவி குடிசைப் பகுதியை நாங்க காலி பண்ண மட்டோம். நிலம் எங்கள் உரிமைன்னு காலாவிலே குரல் கொடுக்கறீங்க.

நான் தாராவியை சினிமாலேதான் பார்த்திருக்கேன். உங்க படத்திலேயே அங்க குடியிருயிருக்கிறவங்க எவ்வளவு சிரமப்படறாங்கன்னு காட்சிகள் இருக்கு. அப்படி இருக்கும்போது, அதே இடத்திலே, பாதுகாப்பு இல்லாம, இட வசதி இல்லாம வாழ்வதுதான் சரின்னு காலா போராடலாமா’ன்னு மூச்சு விடாம சுப்பு பேசிட்டு என்னைப் பார்த்தான்.

‘ஒரு டீ சாப்பிட்டு சொல்றேன்’ என்று அமைதியாக அவனுடன் நடந்தேன்.

ஆனால், அவன் விடவில்லை. ‘காலாவிலே குடிசைகளை மாற்றி நகரியம் அமைக்கும் திட்டம் பத்தி பேசறாங்க. அதிலே, 50 ஏக்கரில் கோல்ப் கிளப், 220 சதுர அடியிலே குடிசைக்கு மாற்றா வீடு கட்டப்போறாதா சொல்றாங்க. அதுக்கு கோல்ப் மைதானம் வேண்டாம். வீட்டை பெரிசா கட்டிக் கொடுங்கன்னுதானே காலா சொல்லணும். அந்த திட்டமே வேண்டாம்னு டயலாக் பேசிட்டு ஏன் உங்க தலைவரு வர்றாரு’ன்னு சுப்பு மறுபடியும் கேட்டான்.

இவன் ஒரு முடிவோடுதான் இருக்கான்னு தெரிஞ்சிட்டுது. ‘இன்னும் டீ வரலை’ன்னு வடிவேலு பாணியிலே பதில் சொன்னேன்.

‘உங்க தலைவர் இப்ப அரசியலுக்கு வந்திட்டாரு. நாளைக்கு தேர்தலில் ஜெயிச்சு முதலமைச்சர் ஆகிடுவாரு. அப்படி இருக்கிறவர், குடிசையிலே இருக்கிறவங்களை மாற்று வழி என்னன்னு  சொல்லியிருக்க வேண்டாமா? வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டணுங்கிறதுங்கறதைக் கூட எதிர்க்கிற மாதிரித்தானே காட்சி வைச்சு இருக்கீங்க. கழிப்பறையோட அவசியத்தை, அதில் நடந்த ஊழலை ஜோக்கர்லே காட்டி தேசிய விருது வாங்கிய ராஜூ முருகனைப் பாராட்டலாம். ஆனால், உங்க தலைவரை வைச்சு, சேரி நிலத்தை காக்கிறோம்ங்கிற பேர்ல ஒரு அபத்தமான திரைக்கதையை ரஞ்சித் அமைச்சதுக்கு ஏண்டா உங்க தலைவர் ஒத்துக்கிட்டார்’ன்னு அடுத்து ஒரு பிடி பிடிச்சான்.

அதோட, ‘ஏழைங்க ஏழைகளாகவே இருக்காங்க… குடிசை வீடுங்க எப்ப மாறும்’னு நீங்க சிவாஜி படத்திலே உங்க தலைவர் பேசலையா?  ‘அண்ணன் வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா’ன்னு இன்னும் நீ பாடிட்டுத்தானே இருக்கே’ன்னு நக்கலா கேட்டான்.

‘உனக்கு நிலவுடமை, வர்க்கபேதம் பத்தியெல்லாம் தெரியாது. தலித் மக்களின் நிலத்தை உயர் சாதியினர் பிடுங்கி வைச்சு இருக்காங்க. தலித்துகளுக்காக கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு அதை அவர்களிடம் கொடுக்கணும். அதுக்குத்தான், நிலமே எங்கள் உரிமைன்னு தலைவர் படத்தை முடிச்சு இருக்காரு. இதெல்லாம், உனக்கு தெரியாத சப்ஜெக்ட்’ என்று நானும் பதிலடி கொடுத்தேன்.

‘இந்த விவகாரம் எல்லாம் ஏகப்பட்ட தலைவர்கள் பேசிட்டாங்க. போராட்டமும் நடத்தீட்டாங்க. நீங்க நிலத்தை மீட்போம்னு பாட்டை வைச்சுட்டு,  சம்மந்தமில்லாமல் தாராவியை வைச்சு கதை பண்ணியிருப்பது சரிதானா’ன்னு அவன் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

‘அதெல்லாம் விடுப்பா.  நாங்க பிஜேபி பின்னாலேதான் இருக்கோம். அவங்கதான் உங்க தலைவரை வழிநடத்தறாங்கன்னு சொன்னீங்களே. அப்படி இருந்தால், இப்படி பிஜேபி அரசோட திட்டத்தை எதிர்த்து தலைவர் படத்திலே நடிச்சு இருப்பாரா? படத்திலே எங்க தலைவர் எதிர்க்கிற வில்லன் காவிக்கொடியோட, நெத்தியிலே திலகத்தோட வர்றாரு கவனிச்சியா. வில்லன் ராமனைக் கும்பிடறாரு. எங்க தலைவரை ராவணனா காட்டறாங்க பார்த்தியா. ராமர் கட்சி எதுன்னு உனக்கு விளக்கணுமா’ன்னு செமக்கேள்வி ஒன்னு கேட்டு சுப்புவின் வாயை அடைக்கப் பார்த்தேன்.

‘அப்படின்னா,  எம்பி தேர்தல்லே பிஜேபியை எதிர்த்து உங்க தலைவர் நிக்கப் போறாரா? பிஜேபியைப் பத்தியோ, மத்திய அரசைப் பத்தியோ இதுவரை ஏன் எதுவும் பேசாமல் இருக்காரு’ன்னு கேட்டுட்டு அடுத்த சப்ஜெக்டுக்கு போனான் சுப்பு.

‘உங்க தலைவர் படத்திலே போலீஸ்காரங்க மோசம்ன்னு காட்டறாரு. அவங்க துப்பாக்கியிலே சுட்டு அப்பாவி மக்களைக் கொல்றதை தட்டிக் கேட்டு போராடுறாரு. ஆனா, ஒரு வாரம் முன்னாலே போராட்டம் நடத்தினா நாடு சுடுகாடு ஆகிடும்னு சொல்றாரு. எதுதான் அவரோட ஒரிஜினல் வாய்ஸ்’ன்னு கேட்டான் சுப்பு.

‘சினிமா வேற… நிஜம் வேறடா…மூன்று முகத்திலே தலைவர் அலெக்ஸ் பாண்டியனா நல்ல போலீஸ் அதிகாரியா இருந்தாரு. தளபதியிலே போலீஸ் கையை வெட்டினாரு. இதையெல்லாம் போய் கேட்கலாமா’ன்னு சொன்னேன்.

‘கண்ணா… அது நடிகர் ரஜினி. இப்ப உங்க தலைவர் அரசியல்லே குதிச்சிட்டாரு. அதனாலே, எதைப்பேசனும்னாலும் யோசிச்சு பேசனும். நாமா செய்யறதைத்தான் சொல்வோம். சொல்றதைத்தான்செய்வோம்னு ஏற்கனவே டயலாக் பேசியிருக்கக்கூடாது. காலா படம் 10 நாளில் வரப்போகுதே. அதிலே நாமலே தலைமை தாங்கி போராட்டம் நடத்தறதுதான் கதையே. அப்படி இருக்க நாம போராட்டமே கூடாதுன்னு பேசக்கூடாதுன்னு யோசிக்க வேண்டாமா… ரீல் லே போராட்டத்தை ஆதரிப்பாரு… ரியல்லே எதிர்ப்பாருன்னா என்ன நியாயம்? இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும்’ என்று முழங்கி விட்டு ஓய்ந்தான் சுப்பு.

‘அதுக்குத்தான் எஸ்.பி.முத்துராமன், ரவிக்குமார் மாதிரி ஆட்களை வைச்சும், ஷங்கர் மாதிரி சயின்ஸ் சப்ஜெக்ட் படங்களையும் தலைவர் பண்ணிகிட்டு இருந்தார். இப்ப அவர் பொண்ணு சொல்லிச்சுன்னு சொல்லி ஒரு ‘அதிபுத்திசாலி’ கிட்ட மாட்டிக்கிட்டாரு. அடுத்து வர்ற படத்தோட டைரக்டர் ஷங்கரோ இல்லை கார்த்திக் சுப்புராஜோ தலைவருக்கு இவ்வளவு நெருக்கடி கொடுக்கிற மாதிரி படம் பண்ண மாட்டாங்கப்பா’ என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டு எஸ்கேப் ஆகி வந்து விட்டேன் தலைவா.

நாங்க பேசியது சரின்னு பட்டா ஏத்துக்குங்க. ஏன்னா எப்பவுமே நீங்க சூப்பர் ஸ்டாராவே இருக்கணும்னு நினைக்கிறோம்.

அன்புடன்,
பொன்னுசாமி
ஈரோடு

கார்ட்டூன் கேலரி