Random image

லோக் ஆயுக்தா சட்டத்தில் முதல்வர், அமைச்சர்களை விசாரிக்கும் அதிகாரம் வேண்டும்: ராமதாஸ்

சென்னை:

மாநிலங்களில் அமைக்கப்படும் லோக் ஆயுக்தா அதிகார வரம்புக்குள் மாநில முதல்வர் மற்றும் அமைச்சர் களையும்  கொண்டு வரவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும்  அரசு அதிகாரிகளின் ஊழல்களை விசாரிக்க வகை செய்யும்  வகையில்  கொண்டு வரப்பட்டது லோக்பால் மசோதா. இதன்படி அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா கொண்டு வர பணிக்கப்பட்டது. ஆனால், தமிழக உள்பட  பெரும்பாலான மாநிலங்கள் லோக் ஆயுக்தாவை இதுவரை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் குறித்து விமர்சித்த உச்சநீதி மன்றம், தமிழகம் தங்களது கால்களில் நிற்கவில்லையா என்று  கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுதொடர்பாக மிழகம் உள்பட 12  மாநில தலைமை செயலர்களும் சாக்குபோக்கு எதுவும் கூறாமல், தற்போதைய நிலை குறித்து 2 வாரத்திற்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் 19ந்தேதி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வர தேவையான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இத்ந நிலையில் பாமக தலைவர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான ஆயுதங்களில் முக்கியமானதாக கருதப்படும் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டமுன்வரைவை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கத்தக்கது ஆகும்.

லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்காக சட்ட முன்வரைவை தாக்கல் செய்து நிறைவேற்ற தமிழக அரசு முன்வந்திருப்பதற்கு காரணம், அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை அல்ல. தமிழகம், புதுவை உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்னும் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தாததற்காக கடந்த ஏப்ரல் மாதம் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், அம்மாநிலங்களில் ஜூலை 10ஆம் தேதிக்குள் லோக் அயுக்தாவை அமைக்க ஏற்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டதால் தான் வேறுவழியின்றி இத்தகைய நிலைக்கு பினாமி அரசு தள்ளப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற ஆணைக்கு பணிந்து தமிழக அரசு ஏற்படுத்தவிருக்கும் லோக் அயுக்தா பெயரளவில் செயல்படும் பொம்மை அமைப்பாக இருந்து விடக் கூடாது என்பது ஊழல் எதிர்ப்பாளர்களின் கவலை ஆகும். 21 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு இருக்கும் போதிலும், அவற்றில் கர்நாடக லோக் ஆயுக்தா தான் சக்தி வாய்ந்த அமைப்பு ஆகும்.

மராட்டிய லோக் அயுக்தா தான் எதற்கும் பயன்படாத பலவீனமான அமைப்பு ஆகும். தமிழகத்தில் அமைக்கப்படவிருக்கும் லோக் அயுக்தா கர்நாடகத்தில் இருப்பதை விட கூடுதல் அதிகாரங்களைக் கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர, மராட்டியத்தில் இருப்பதை விட பலவீனமானதாக இருந்து விடக் கூடாது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் இருப்பதைப் போலவே முதல்- அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள், அனைத்து அரசு ஊழியர்கள் ஆகியோர் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு லோக் அயுக்தாவுக்கு ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக லோக் அயுக்தாவாக நியமிக்கப்படுவர்கள் அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவோ இருக்கும் வகையில் சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட வேண்டும்.

மாறாக, ஊழல்வாதிகள் தப்பிக்க வசதியாக வலுவற்ற லோக் அயுக்தா அமைக்கப்பட்டால் அதைக் கண்டித்து பா.ம.க. போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.