Random image

லோக் ஆயுக்தா மசோதா இந்த கூட்டத்தொடரிலேயே சட்டமாக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

”லோக் ஆயுக்தா மசோதா தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு இந்த கூட்டத்தொடரிலேயே சட்டமாக்கப்படும் அமைச்சர் ஜெயக்குமார் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று வீட்டு வசதி மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது,  திமுக எம்எல்ஏ சேகர்பாபு, தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  ”லோக் ஆயுக்தா மசோதா விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், நடப்பு  கூட்டத்தொடரிலேயே சட்டமாக்கப்படும்” என்றும் பதில் அளித்தார்.

லோக் ஆயுக்தா அமைப்பை இதுவரை ஏற்படுத்தாத தமிழகம் உள்பட 12 மாநிலங்களுக்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் அதற்கான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதன் காரணமாக லோக் ஆயுக்தா மசோதா உருவாக்கும் பணியில் தமிழக அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தொடரிலேயே மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.