சிறப்பு கட்டுரை:

மிழக அரசியல் நிகழ்வுகள் ஆளுங்கட்சி, எதிர்கட்சியை விட்டுவிட்டு திடீர் திடீரென  யாரை எப்போது மையமாக வைத்து சுற்றும் என்பதே புரியாத புதிராக இருக்கிறது..

சிஷ்டம் சரியில்லை..போருக்கு தயாராகுங்கள் என்று சொன்ன ரஜினியை, கமல்ஹாசன் அதிரடி டுவிட்டர்களால் பின்னுக்கு தள்ளினார். இப்போது, இளைய தளபதி பட்டத்தில் இளைய என்பதை கழட்டிவிட்டு நேரடியாகவே தளபதியாகியிருக்கும் விஜய் வடிவத்தில் வந்திருக்கிறது புது கலாட்டா.

மெர்சல் பட சர்ச்சையில், கடைசியில்.காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திகூட படத்துக்கு ஆதரவாக கருத்து சொல்லியே தீரவேண்டிய அளவுக்கு தேசிய முக்கியத்துவம் கிடைத்துவிட்டது..

7 சதவீத ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூர் அரசு இலவச மருத்துவம் கொடுக்கிறது..ஆனால், 28 சதவீத ஜிஎஸ்டி வாங்கும் அரசு, மருத்துவத்தை இலவசமாக வழங்க மறுக்கிறது.. இங்கே தாலியை அறுக்கும் டாஸ்மாக் சரக்கிக்கிற்கு ஜிஎஸ்டியே கிடையாது என்று படத்தின் ஹீரோ உணர்ச்சி பூர்வமாய் வசனம் பேசுகிறார்..

இந்த காட்சிகளைத்தான் படத்திலிருந்து உடனே தூக்கவேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா ஆகியோரோடு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.. மோடி அரசுக்கு எதிராக நடிகர் விஜய் பொய்ப்பிரச்சாரம் செய்வதாகவும் இவர்கள் சீறுகிறார்கள்.

மத்தியில் ஆள்வதோடு மாநில அரசையும் ஆட்டிப்படைப்படைக்கும் பாஜகவை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பதால், படக்குழுவும் அலறிப்போனது.. ஆட்சேபனைக்குரிய காட்சிகளை அகற்றுவோம் என்று பாஜக தரப்பிடம் சொன்னது..

ஆனால் பாஜக எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக மெர்சல் காட்சிகளை நீக்கக்கூடாது என்று தமிழ்திரை உலகின் பல்வேறு சங்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுக்க ஆரம்பித்துவிட்டன.

இன்னொரு பக்கம் மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தாக வெளிப்படையாய் சொல்லி, வில்லங்கமான சிக்கலில் மாட்டி தத்தளிக்கிறார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.. நடிகர் விஜய்யை ஜோசப் விஜய் என்று விளித்ததோடு, அரசு ஆவணங்களில் ஜோசப் விஜய்தான் உள்ளது எனச்சொல்லி ஆதாரங்களையும் அவர் அள்ளித்தெளித்துள்ளார் என்பது இன்னொரு சூடான பக்கம்…

இதனால் விளைந்த ஒரே பயன், மெர்சல் படத்தை காண தியேட்டர்களை நோக்கி படையெடுப்போரின் கூட்டம் அதிகரித்து படத்தின் கல்லாபெட்டியில் கோடிகோடியாய் போடவைக்கின்றன என்பதுதான்..

மேலே சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களும் வெளியுலகத்திற்கு தெரிந்து நடந்துவரும் களேபரங்கள்.. ஆனால் இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு திரை மறைவை கொஞ்சம் அலசினால் பல கேள்விகள் விடையில்லாமல் தத்தளிக்கும்..

ஜிஎஸ்டி, கோரக்பூர் அரசு மருத்துமனைகள் சாவு போன்றவற்றை பற்றி மெர்சல் படத்தில் பேசுவதை பார்க்க நேரிட்ட, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழு உறுப்பினர்கள் மேலிடத்திற்கு தகவல் சொல்லி ஒப்புதல் பெறாமலா படத்திற்கு சான்று அளித்திருப்பார்கள்?

அப்படி மேலிடத்திற்கு அவர்கள் தெரிவிக்காமல் இருந்திருந்தால் இன்னேரம் அவர்களின் சீட்டு கிழிந்திருக்குமே? குறைந்தபட்சம் தாங்களே முன் வந்து ராஜினாமா செய்துவிட்டு ஒடியிருப்பார்களே..

ஆனால் நாங்கள் தணிக்கை செய்ததில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார்களே….இது யார் தரும் தைரியம்..?

நடிகர் விஜய்யின் ஜிஎஸ்டி வசனங்களை மட்டுமே பெரிதுபடுத்தி கோபப்படும் பாஜகவினர், ‘’இந்தியாவில் எவனிடமும் பணமில்லை..என்று சொல்லிவிட்டு, பொதுமக்கள் நாக்கை வழித்துக்கொண்டிருக்கிறோம் என்று சைகையால் அதே மெர்சல் படத்தில் வடிவேலு சொல்லும் காட்சியை ஏன் கண்டுகொள்ளவில்லை..

இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போவோம், மெர்சல் படம் வெளியீட்டையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து நன்றி தெரிவித்தார்..

அப்போது மெர்சல் படத்தின் காட்சிகள், வசனங்கள் பற்றி முதலமைச்சரிடம் எடுத்துச்சொல்லப்பட்டதா என்பது தெரியவில்லை..ஆனால் படம் வெளியாகி வசனங்களால் சர்ச்சை ஏற்பட்ட பிறகும், மெர்சல் எந்த பிரச்சினையும் இன்றி தமிழக தியேட்டர்களில் அமைதி வழியில் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கின்றன..

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான ஒரு விஷயம், தமிழகத்தில் வெற்றிநடைபோடுகிறது என்றால் என்ன அர்த்தம்? ஒன்று மேலிடத்தின் நிலைப்பாடு தமிழக அரசுக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும்.. இல்லையென்றால், நாங்கள் தான் மோடியை வெளிப்படையாக எதிர்க்கமுடியவில்லை..நீங்களாவது விளாசுகிறீர்களே என்று மனதுக்குள்ளேயே எடப்பாடி அரசு சந்தோஷப்படவேண்டும்..

இது இரண்டுமே கிடையாது.. மத்திய அரசின் அங்கமான தணிக்கை குழு அனுமதித்த ஒரு படத்தை சுதந்திரமாக ஓடவிடுவதுதான் அரசின் கடமை என்று எடப்பாடியார் கருதலாம் என்றும் நாம் கம்பீரத்தோடு  எடுத்துக்கொள்ளலாம்..

இந்த கட்டத்திற்கும் கொஞ்சம் பின்னோக்கி செல்வோம், மெர்சல் படம் வெளியாகும் முன்பே, ஆன்மீக காஞ்சிக்கு மெர்சல் குடும்பத்து முக்கிய புள்ளி ஒருவர் வந்து தரிசனம் பெற்று, முக்கியஸ்தர் ஒருவரை பார்த்து ஆலோசித்துவிட்டு சென்றதாக ஓடும் ஒரு தகவலை இங்கே, கொண்டுவந்து கோர்த்துப்பார்த்தே தீரவேண்டும்..

விஜய்க்கு எதிராக கூக்குரல் எழுப்புவர்கள் அனைவரும் மாநில பாஜக தலைவர்களே.. பாஜகவை வழிநடத்தி செல்லும் நிஜமான அதிகார மையங்கள், ஆலோசனை மையங்கள் ஆகிய இரண்டு இடங்களிலுமே நோ எதிர்ப்பு.. ஒன்லி மௌனம்… ‘’எச்.ராசா, ஒரு தேசிய செயலாளராச்சே’’? என்று இந்த இடத்தில் நீங்கள் கருதினால், உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று அர்த்தம்.

விஜய்யின் மெர்சல் சர்ச்சை உருவான நேரத்தை கவனித்தீர்கள் என்றால் கமலஹாசன் டூவிட்டரிலும் ரஜினி ‘போருக்காக தயாராகுங்கள்’ என்று சொல்லி வந்த காலகட்டதை கொஞ்சம் தள்ளித்தான்..

மெர்சல்‘சர்ச்சைக்கு பிறகு, கமலும் ரஜினியும் அரசியல் பரபரப்பு பக்கங்களில் இருந்து தற்காலிகமாக மறக்கப்பட்டார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை..

இதை அவர்களும் உணர்ந்துவிட்டார்கள். அதன் அடையாளம்தான் படம் வெளியாகி சில நாட்களுக்கு ஆனபிறகே ரஜினியும் கமலும் லைம் லைட்டு சுவிட்ச் போடுகிறார்கள்..

நீண்டு நாட்களுக்கு பின் டெங்கு நிலவேம்பு நீர்பற்றி டுவிட்டர் போட்டு வில்லங்கத்தில் சிக்கிய கமல், ஞாயிற்றுகிழமை விஜய்யுடன் மெர்சல் படத்தை பார்க்கிறார்..

இன்னொரு பக்கம் சூப்பர்  ஸ்டார் ரஜினி, மெர்சல் பற்றி டுவிட் போடுகிறார்… இப்படி மெர்சல் களேபரத்தை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க முடியாமல், ரஜினியும் கமலும் ஒரே நாளில் வெளியே வரவேண்டிய சூழல்..

ஆனாலும் கமலும் ரஜினியும் நடிகர் விஜய்யை கலாய்த்த ஆழ்ந்த அரசியல் இதில் பொதிந்திருப்பதை உணரவே முடிகிறது.

மெர்சல் படத்தை நடிகர் விஜய் உட்பட்ட மெர்சல் படக்குழுவின ரோடு கமல் பார்த்தது அவருடைய ஆழ்வார்பேட்டை வீட்டு பிரத்யேக தியேட்டரில்..

படக்குழுவினரை கமல் பாராட்டுவது தொடர்பாக வெளி யிடப்பட்ட புகைப்படங்களில், பின்னணியில் கமல் நடித்து 28 ஆண்டுளுக்க முன்பு வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தின் போஸ்டர் இடம் பிடித்துள்ளன..

மெர்சல் படம், அபூர்வ சகோதரர்களின் அப்பட்டமான காப்பி என்று பலரும் விமர்சனம் வைக்கும் நிலையில், கமல் இப்படி கூப்பிட்டு போஸ்டர் பின்னால் வைத்து குத்தியது உள்குத்து அல்ல வெளிப்படையான குத்து என்றே சொல்லலாம்.

ரஜினியும் அவர் பங்குக்கு டிவிட்டரில் விளையாடியிருக்கிறார்.. அதாவது, ‘’முக்கியமான பிரச்சினைகள் அலசப்பட்டுள்ளன.. மிகவும் அருமை.. வாழ்த்துகள்..’’ எனசொல்லிவிட்டு உஷாராக மெர்சல் என்ற வார்த்தையை கடைசியில் போட்டு அதற்கு மட்டும் #-ஐ மாட்டிவிடுகிறார்.

#Mersal என்றால், மெர்சல் என்ற வார்த்தையை ஆஷ்டேக் செய்து சொல்லப்படும் எல்லா டுவிட்டர் செய்திக்கடலிலும் இந்த டிவிட்டர் கலக்கும்.. அந்த டுவிட்டர் கடலில் மெர்சலை பாராட்டிய டுவிட்டர்களும் இருக்கும்..வறுத்தெடுக்கும் டுவிட்டர்களும் இருக்கும்.. வாழ்த்துக்கள் டூ மெர்சல் என்று சொல்லாமல் சூப்பர் ஸ்டார் பல விஷயங்களுக்கு பொருந்துகிற மாதிரி சுத்திசுத்திவிட்டிருக்கிறார்..

போகட்டும், மீண்டும் நேரடி விஷயத்துக்கு வருவோம்.. மேலே ஏறுபவர்களையெல்லம் இறக்கிவிடும் நண்டு அரசியலை நடிகர் விஜய்யை வைத்து இவ்வளவு தூரம் விளையாட வேண்டிய அளவுக்கா பாஜக இருக்கிறது என்று கேட்டால், தமிழகத்தை பொறுத்தவரை அதற்கு அவசியம் இல்லையென்றெல்லாம் சொல்லிவிட முடியாது..

பாருங்கள், டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள், ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிகளின் பனிப்போர், மாநில முன்னேற்றத்திற்கா புதிய நலத்திட்டங்களை அறிவிக்காமல் சாதாரண குமாஸ்தா போல் ஆட்சி செய்யும் அரசு..என எவ்வளவு விஷயங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன..

விஜய் மேட்டரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு அடுத்து என்ன விவகாரத்தை அட்மிட் செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.. ஆனால், ‘’தமிழகத்தில் யாரும் தனிப்பட்ட ரீதியில் வளர்த்துவிடக்கூடாது..அனைவரும் கைக்குட்பட்டே இருக்கவேண்டும்’’ என்பதில் கவனம் கொண்டு ஆளாளுக்கு கொம்பு சீவி விடப்படுகிறது…

அரசியலில் இப்படியெல்லாமா நடக்கும்? அரசியல் குழப்பத்தால் ஒன்றுமே புரியாமல் தத்தளிக்கும் தமிழகத்தில், இதுபோன்றவை நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம்..

-ஏழுமலை வெங்கடேசன்