நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு… விடுதலை…

சென்னை:

தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை நீதிமன்றம் விடுதலை செய்தது. காவல்துறை குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவின் கீழ் அவரை கைது செய்ய முடியாது என்று கூறி, அவரை விடுதலை செய்வதாக அறிவித்தது.

ஆளுநர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக, நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரது கைது ஊடகத்துறையினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கைது தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார்.  அதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு கோபாலை  காவல்துறையினர் அழைத்து சென்று மருத்துவமனை பரிசோதனை முடிந்ததும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

முன்னதாக இந்து பத்திரிகை ஆசிரியர் ராம், 124வது சட்டப்பிரிவின் கீழ் வராத ஒரு வழக்கில் நீக்கரன் கோபால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது இந்தியாவிலேயே  முதன்முறை. இந்த வழக்கின் அடிப்படையில் அவரை நீதி மன்ற காவலுக்கு அனுமதித்தார், தவறான உதாரணமாகி விடும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், விசாரணையின்போது, நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி  நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்/

இதன் காரணமாக நக்கீரன் கோபால் உடடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.