புதுடெல்லி: வரலாற்று புகழ்வாய்ந்த டெல்லி செங்கோட்டையில், விவசாயிகள் ஏற்றிய சீக்கியர்களுக்கு புனிதமான நிஷான் சாஹிப் கொடி, தேசியக் கொடியை அகற்றிவிட்டு ஏற்றப்படவில்லை என்று அதற்கான புகைப்படத்துடன் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினமான இன்று, டெல்லியில், செங்கோட்டையில், இந்திய தேசிய மூவர்ணக்கொடி பறக்கும் இடத்தில், அதை அகற்றிவிட்டு, நிஷான் சாஹிப் கொடி ஏற்றப்பட்டதாக சில மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. தேசியக் கொடியை விவசாயிகள் அவமதித்து விட்டதாகவும் பொய் செய்திகள் பரவின.

ஆனால், அந்த தகவல் தவறு என்று தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஆதாரப் புகைப்படத்தில், சீக்கிய விவசாயிகள் தங்கள் கொடியை ஏற்றிய கொடிக் கம்பம் காலியாக இருக்கிறது. அதன்ருகில், மற்றொரு கம்பத்தில் இந்திய தேசியக்கொடி பறந்து கொண்டுள்ளது. அதை யாரும் தொந்தரவு செய்யவில்லை.

நிஷான் சாகிப் கொடி என்பது ஒவ்வொரு குருத்வாரா வளாகத்திலும் பறக்கவிடப்படும். அது கால்சா இருப்பதற்கான அடையாளம். மேலும், அது முக்கோண வடிவ கொடியாகும். ஆனால், காலிஸ்தான் கொடியோ செவ்வக வடிவமானது என்பது குறிப்பிடத்தக்கது.