விருதுநகர்,

ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு: சிவகாசி தீப்பெட்டி ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

இன்று வேலை நிறுத்தம் 6வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

தீப்பெட்டி ஆலைகளுக்கு விதித்த 18% ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாவட்டங்களில் உள்ள  தீப்பெட்டி ஆலைகள் 6வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகினற்னர்.

 

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகாசி, விருதுநகர்,  வேலூர் மாவட்டங்களில் தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வந்தாலும், இத்தொழிலில் முன்னோடியாகத் திகழ்வது விருதுநகர் மாவட்டம்.

இத்தொழில் மூலம் ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டப்படுகிறது.

தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, குடிசை தொழிலாக செய்யப்பட்டு வந்த  தீப்பெட்டி தொழில் நசிந்துவிடும் என்றும் உற்பத்தியாளர்கள் கூறி வருகின்றனர்.

போராட்டத்தை தொடர்ந்து தினசரி ஆர்ப்பாட்டம், பேரணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் 10ந்தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.

 

ஜீஎஸ்டி எதிரொலியாக 1000க்கும் மேலான ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.