சென்னை,

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிறுவயதில் வாழ்ந்த கேரளாவில் உள்ள ஓட்டு வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமியும் உதவி வருகிறார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடவனூர். இங்கு எம்ஜிஆர் சிறு வயதில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இது எம்ஜிஆரின் தாயார் சத்தியபாமாவின் பரம்பரை வீடு என கூறப்படுகிறது.

எம்ஜிஆரின் தந்தை இலங்கையில் உள்ள கண்டியில் நீதிபதியாக பணியாற்றினார் என்றும், ஓய்வுபெற்ற பின்னரே கேரளாவுக்கு திரும்பி வடவனூரில் குடியிருந்ததாக கூறப்படுகிறது.

எம்ஜிஆர் இலங்கையில் அவரது பெற்றோர் வசிக்கும்போது பிறந்ததாகவும், ஆனால் அவர் சிறுவயதிலேயே கேரளாவுக்கு வந்து இந்தவீட்டில் வாழ்ந்து வந்தாகவும், பின்னர் எம்ஜிஆரின் தந்தையார் மரணத்திற்கு பிறகு, அவரது தாயார் அவரையும், அவரது சகோதரர் சக்கரபாணியையும் கும்பகோணம் அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பிற்காலத்தில்  அவர் சென்னையில் குடியேறினாலும் இந்த வீட்டை மறக்கவில்லை. தமிழக முதல்வராக வந்த பிறகுகூட அவ்வப்போது இங்கு வந்து போனதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  கேரளாவில் உள்ள எம்ஜிஆரின் பூர்விக வீடான அந்த ஓட்டு வீட்டை எம்ஜிஆர் நினைவு இல்லமாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது.  70 ஆண்டுகள் பழமையான அந்த வீட்டை சீரமைக்கும் பணியை சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடங்கியுள்ளார்.

இதற்காக அவர் ரூ.10 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது அந்த வீடு பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், மரக்கட்டைகளால் வேயப்பட்ட அந்த கூரை தற்போது புதிதாக அமைக்கப்பட உள்ளது. சுவர்கள் பூசப்பட்டு, கூரையில் உள்ள ஓடுகள் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், அந்த வீட்டினுள்  எம்ஜிஆரின் சிலை நிறுவப்பட இருப்பதாகவும், அத்துடன்  அருகிலேயே எம்ஜிஆர் குறித்த புத்தகங்கள், புகைப்படங்கள் அடங்கிய விளக்க மையமும் அமைக்கப்படுகிறது.

கூடுதல் சிறப்பாக எம்ஜிஆர் குறித்த ஆவணப்படங்கள் மற்றும் அவர் நடித்த படங்கள் அனைத்தையும் திரையிட சிறு திரையரங்கும் உருவாக்கப்பட உள்ளது.