சென்னை,

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 91வது நாளாக அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே முதல்கட்ட போராட்டம் அரசின் வேண்டுகோளை ஏற்று கைவிட்ட நிலையில், மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்தியஅரசு ஏலம் விட்டதை தொடர்ந்து, இரண்டா வது கட்டமாக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தொடர்ந்து 91 நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஸ்டாலின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எம்.சி.சம்பத் நெடுவாசலில் மீத்தேன் திட்டம் செயல்படாது  கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி. எரிவாயு கசிவு தொடர்பாக போராட்டம் நடந்து வருகிறது. சமீபத்தில் 93 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 30-ந்தேதி பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் மீது ஜாமீனில் வரமுடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 3-ந்தேதி வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். நேற்று 27 கட்சிகள் இணைந்து பேரணி நடத்தி உள்ளன.

எனவே இதற்கு ஒரு சுமூகமான சூழ்நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற்று அங்கு அமைதியான சூழ்நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் நெடுவாசல் போராட்டமும் தொடர்கிறது. (சபாநாயகர் குறுக்கிட்டு, இதற்கு நேற்றே விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது என்றார்).

மு.க.ஸ்டாலின்:- நெடுவாசலில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது, அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த  அமைச்சர் எம்.சி.சம்பத்:-

இந்த பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் பிரதமரை சந்தித்து நமது உணர்வுகளை தெரிவித்து இருக்கிறார்.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த மே மாதம் 16-ந்தேதி மத்திய அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்து இருக்கிறது.

அதில் மாநில அரசின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம். நீங்கள் விரும்பாவிட்டால், அந்த திட்டம் அனுமதிக்கப்படாது என்று தெரிவித்து இருக்கிறது.

எனவே நெடுவாசல் திட்டம் செயல்படாது, அதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.