டெல்லி:

ஜி.எஸ்.டி அமல்படுத்துவதை ஜூலை 1ம் தேதியில் இருந்து செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


ஏர் இந்தியா உள்ளிட்ட சில உள்நாட்டு விமான நிறுவனங்கள் உடனடியாக புதிய வரி விதிப்பு முறைக்கு மாற இயலாது என்று தெரிவித்துள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘‘ஜிஸ்டி அமல்படுத்த போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும். உலகளவில் டிக்கெட் விநியோக முறையை இது பாதிக்கும் என்பதால் அதற்கு ஏற்ற கால அவகாசம் தேவைப்படும் என்று நிதியமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்று விமான போக்குவரத்து அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘‘ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் சர்வதேச அளவிலான டிக்கெட் விநியோக முறையை கொண்டுள்ளது. ஏஜென்ட்கள் மூலமும் புக்கிங் செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கு ஏற்ப புதிய சாப்ட்வேர் கொண்டு வரவேண்டும். சில விமான நிறுவனங்கள் 8 முதல் 9 மாதங்கள் வரை அவகாசம் கேட்டுள்ளது. அதனால் ஜி.எஸ்.டி அமல்படுத்துவதை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்று மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேலும், அந்த கடிதத்தில் விமான போக்குவரத்து துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நான்கு அம்சங்களில் மாற்றம் கொண்டு வர அந்த கடிதத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ‘‘ஜிஎஸ்டி மூலம் உள்ளூர் விமான நிறுவனங்களை விட வெளிநாட்டு விமான நிறுவனங்களே அதிகம் பயன்பெறும் வகையில் திட்டங்கள் உள்ளது. வரி சலுகை சாதாரண வகுப்பு பயணிகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சரக்கு பரிமாற்றத்தில் இந்தியன் ரெயில்வேக்கு ஜிஎஸ்டி குழு சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதேபோல் மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சில இடங்களில் நின்று செல்லும் விமானங்களை விட இடைநில்லா விமானங்களின் கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் வளைகுடா விமானங்கள் பயணிகளை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது’’ என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.