ஆற்றுப்பாலங்களில் நீர்மட்ட உயர்வை ஆய்வு செய்ய நவீன கருவி: ஐஐடி நிறுவியது

சென்னை,

ழைக்காலத்தின்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கை கண்டறிய நவீன கருவியை சென்னை ஐஐடி அடையாற்றில் நிறுவி உள்ளது.

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து, வெள்ளம் குறித்து முன்கூட்டியே அறியும் வகையில் நடவடிக்கை எடுக்க அரசு முயற்சித்து வந்தது.

இந்நிலையில், தற்போது போன்ற  மழைக்காலத்தில் ஆற்றுப்பாலங்களில் உயர்ந்து வரும்  நீர்மட்ட உயர்வை ஆய்வு செய்ய நவீன கருவியை சென்னை ஐஐடி தயாரித்து உள்ளது.

தற்போது அந்த கருவி சென்னையில் உள்ள அடையாற்றில்  6 இடங்களில் வைக்கப்பட்டு உள்ளது.

சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகே உள்பட பல இடங்களில் இந்த கருவி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சோதனை முயற்சியாக வைக்கப்பட்டுள்ள இந்த கருவியின் செயல்பாடை பொருத்து நாடு முழுவதும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை ஐஐடி சிவில் இன்ஜினீயரிங் துறை மற்றும் நீராதார பொறியியல் பிரிவு இணை பேராசிரியர் பாலாஜி நரசிம்மன் கூறும்போது,

இந்த கருவி மூலம் மழைக்காலத்தில் ஆற்றுப் பாலங்களில் நீர்மட்டம் எவ்வளவு அடி உயருகிறது என்பதை கணக்கிட முடியும். அதன் காரணமாக அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவும்,  நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் இந்த கருவி வரப்பிரசாதமாக இருக்கும்.

இது தொடர்பான ஆய்வுத் திட்டத்தை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றிடம் ஒப்படைத்தார்.

அதன்படி, இந்த மூன்று உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் நவீன ரேடார் சென்சார் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது   சோதனை முயற்சியாக, சென்னையில் அடையாறு திரு.வி.க. பாலம், சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம், நேப்பியர் பாலம், எண்ணூர் முகத்துவார பாலம், அண்ணா நகர் ஆர்ச் அருகேயுள்ள கூவம் பாலம், பள்ளிக் கரணை ஒக்கியம் மடுவு பாலம் ஆகிய 6 ஆற்றுப்பாலங்களில் இந்த ரேடார் சென்சார் கருவியை ஐஐடி நிறுவியுள்ளது.

மேலும்,  மழை அளவை கண்காணிக்க 15 இடங்களில் மழைமானிகள் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எவ்வளவு மழை பெய்தால் ஆற்றுப்பாலத்தில் நீர்மட்டம் எவ்வளவு உயருகிறது என்பதை கணக்கிட முடியும்.

ஒவ்வொரு பாலத்திலும் நிறுவப்பட்டுள்ள சென்சார் சாதனமானது பாலத்தில் உள்ள நீர் மட்ட அளவு குறித்த தகவல்களை சென்னை ஐஐடியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.

இந்த ஆய்வு மூலம், மழை அளவுக்கு ஏற்ப ஆற்றுப்பாலங்களில் நீர் மட்டம் உயரும் அளவை தெரிந்து கொள்வதால் அதற்கேற்ப வெள்ள அபாய தடுப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.