ஐதராபாத்:

மோடியின்  ஆட்சி என்றாலே நினைவுக்கு வருவது ‘பசு குண்டர்கள், கும்பல் வன்முறை’ தான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.

ஓவைசி

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ள நிலையில், மோடி ஆட்சிக்கு வந்ததும் எழுந்த பசு வதை, மாட்டிறைச்சி வன்முறைகள் போன்றவை  எதிர்க்கட்சிகள் மற்றும் உச்சநீதி மன்றத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து  கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது அசாமில்  மாட்டிறைச்சி விற்பனை  செய்த முஸ்லிம் முதியவர் ஒருவரை ஒரு கும்பல் அடித்து துன்புறுத்தியது.  இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  68-வயது முதியவர் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்தார் என்பதற்காக ஒருகும்பல் அடித்து துன்புறுத்தியது உண்மையில் கொடூரமானது. அபல ஆண்டுகளாக அவர்  மாட்டிறைச்சி விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது அவரை குண்டர்கள் தாக்கி உள்ளனர் அவருக்கு  வலுக்கட்டாயமாக பன்றி இறைச்சியை திணித்துள்ளனர், அவர்கள்   மனிதர்களாக இருக்கக்கூட தகுதியில்லாதவர்கள், அவர்கள் மிருகங்கள். மோடி பிரதமராக இருந்த ஒட்டுமொத்த வாழ்க்கையில் இதை தடுக்க முடியாமல் போனது பெரும் சோகம்.

மோடியின் ஆட்சியில் நினைவு கூறத்தக்கது என்னவென்று பார்த்தோமானால், அவரது ஆட்சி காலத்தில் நடைபெற்ற  கும்பல் வன்றை,  பசு குண்டர்கள் நடத்தும் வன்முறை போன்றவைதான் நினைவுக்கு வரும், மோடி தங்களின் கொள்கைகளுக்கும், சித்தாந்தத்துக்கும் ஆதரவு அளிப்பார் எனத் தெரிந்து கொண்டு துணிச்சலாக அவர்கள்  செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

‘பாஜக தனது தேர்தல் அறிக்கையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்வோம் என்று கூறியுள்ளது,,,  கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தது. ஜம்மு காஷ்மீரில் பிடிபியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது 370 சட்டப்பிரிவை ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய ஒவைசி, தேர்தல் வரும்போது மட்டும்தான்  மலிவான, ஏமாற்று அரசியலை நடத்துகிறார்கள் என்று விமர்சித்தார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடி மோசமாக தோற்பார் என்று கூறியவர், பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்றும் தெரிவித்தார்.