Random image

கம்பம்: இரு  குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

னது இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம், தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் ம்பம் புதுப்பள்ளிவாசல் அருகே உள்ள சமையன்தெருவை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 34). இவர், கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயமணி (28). இவர்களுடைய மகள் தேஜாஸ்ரீ (8), மகன் கார்த்தி விஸ்வநாதன் (3).

அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேஜாஸ்ரீ 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று இரவு எட்டு மணியளவில் அழகுதுரை, பணிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அழகுதுரை கதவை தட்டிப்பார்த்தார். இருப்பினும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த  அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் விட்டத்தில் ஜெயமணி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தார். மேலும் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தேஜாஸ்ரீயும், கார்த்தி விஸ்வநாதனும் பிணமாக மிதந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜெயமணி உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு ஜெயமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

குடும்பப் பிரச்சினை காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.