மதுரை:

முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்த 3 பேர் கொண்ட  கண்காணிப்புக்குழுவினர், அணை பலமாக  இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான தமிழகஅரசு தொடர்ந்த வழக்கில், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும்,  அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ்  நியமிக்கப்பட்டார்.

தற்போது, தென்மேற்கு பருவமழை  தொடங்க உள்ளதால், மூவர் குழு முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் நேற்று ஆய்வு நடத்தியது.  மழைக்காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், அதில் தமிழக அரசு பிரதிநிதியாக தமிழக பொதுப்பணித்துறையின் அரசு முதன்மை செயலர் பிரபாகரன் மற்றும் கேரள அரசு பிரதிநிதியாக கேரள அரசின் நீர்பாசனத்துறை அரசு செயலர் அசோக் ஆகியோர்  பங்கேற்றனர்.

அப்போது பிரதான முல்லை பெரியார்  அணை மற்றும் பேபி அணை குறித்து ஆய்வு செய்யப் பட்டன. மேலும் . அணையின் 13 மதகுகளில் மாதிரிக்காக முதல் மதகு இயக்கி சரிபார்க்கப்பட்டது. அணையின் பலத்தை நிரூபிக்கும் சுரங்கப்பகுதியில் இருந்து வழியும் அணையின் கசிவு நீரின் அளவு சரிபார்க்கப்பட்டது. அதில் நிமிடத்திற்கு 17 லிட்டர் அணையில் இருந்து வெளியேறுவது கண்டறியப்பட்டு, அது அணையின் நீர்மட்டம் 112 அடிக்கு ஏற்றாற்போல் இருப்பதால் அணை பலாமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது

தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய 3 பேர் குழுவினர் முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக தெரிவித்தனர். மேலும்,  அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ற கசிவுநீர் வெளியேற்றமும், மதகுகள் இயக்கமும் சீராக இருப்பதாகவும்,  இருக்கிறது எனவும் மூவர் கண்காணிப்புக்குழு தலைவர் குல்சன் ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பேபி அணையை பலப்படுத்துதல், அதற்காக 29 மரங்களை வெட்டுதல், அணைக்கு 19 ஆண்டுகளாக வழங்கப்படாத மின்சாரம் வழங்குதல், வல்லக்கடவு முதல் முல்லைப்பெரியாறு அணை வரையிலான 6 கிலோமீட்டர் சாலை சீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த 3பேர்குழுவினர்,  பேபி அணையை பலப்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்கான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்தாலும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என்று கூறினர்.