சென்னை:

நாளை நாடு முழுவதும் முழு வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் நாளை மறியல் போராட்டம் நடைபெறும் என்று  கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்து உள்ளன.

மத்திய அரசை கண்டித்து ஜனவரி 8ந்தேதி (நாளை)  நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. இந்த போராட்டத்துக்கு தமிழகத்தில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில், நாளை தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் கூறியுள்ளன.

இது தொடர்பாக  பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேஷன் மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது,

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8-ம் தேதி (நாளை) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன.

விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களும் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததோடு, ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் சீர் குலைக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி துறை நெருக்கடியில் சிக்கியுள்ளது. லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் அழிந்துள்ளன.

மறு பக்கம், பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகைகள், ஊக்கத் தொகை, மானியம் என்ற பெயரில் மக்கள் வரிப் பணம் வாரி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் சமூக, பொருளாதார தளத்தில் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணமான தாராளமயக் கொள்கைகளையும், குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற திட்டங்களையும் கைவிட வலியுறுத்தி நடத்தப்படும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.