சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதா பெரு முதலாளிகளுக்கு மட்டுமே  ஆதரவாக உள்ளது என புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லி செல்வதற்காக சென்னைவிமான நிலையம் வந்த புதுச்சேரி முதல்வர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  “மத்திய அரசு வேளாண் துறையை பாதுகாப்பதாக கூறி 2 சட்ட மசோதாக் களை கொண்டு வந்து உள்ளது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் அளிக்க கூடிய வகையில் இல்லை. இடைத்தரகர்கள், பெரிய முதலாளிகள், பெரிய வியாபாரிகளுக்கு மட்டுமே இந்த சட்டங்கள் பாதுகாப்பாக இருக்கிறது.

சட்டத்தை பார்க்கும் போது எல்லாமே வியாபார மையமாக உள்ளது.  விவசாய பொருட்களின் விலையை விவசாயிகள்தான் நிர்ணயிக்க வேண்டும். இடைத்தரகர்களோ வியாபாரிகளோ நிர்ணயிக்க முடியாது.

ஆனால் பெரிய அளவில் மார்க்கெட்டிங், பெரிய முதலாளிகளுக்கு பாதுகாப்பாக சட்டம் உள்ள தால்தான் எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன.

இந்த சட்டத்தை எதிர்த்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள அகாலிதளம் கட்சியைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருப்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.

பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சிறப்பாக விவசாயம் செய்யக்கூடிய பகுதிகள். இதனால்தான் காங்கிரஸ், அகாலிதளம் எதிர்க்கிறது. வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.