டில்லி,

த்தியில் பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு, இந்துக்களின் தெய்வம் என்று பசுவை கறிக்காக வெட்டக்கூடாது என்று அறிவுறுத்தி வந்தது.

அதைத்தொடர்ந்து வட மாநிலங்களில்  பசு பாதுகாப்பு ஆர்வலர்கள் என்ற ஒரு கும்பல் பல்வேறு இடங்களில் மாடுகளை கொண்டு செல்பவர்களையும், கறி கடைகளையும் வன்முறையால் சூறையாடி வருகின்றனர்.

இந்நிலையில், மாடுகளை வெட்டுவதற்காக விற்க முடியாத வகையில் புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த சட்டத்திருத்தத்தின்படி இனிமேல் மாடுகளை கறிக்காக வெட்டுவதற்கு, விற்பனை செய்ய முடியாது, விவசாயிகளுக்கு மட்டுமே விற்க முடியும்.

மத்தியச் சூழல் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புதிய திருத்தத்தின் படி விலங்குகள் பாதுகாப்பு திருத்தச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் படி மாடுகளை விவசாயம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்த மட்டுமே வாங்குகிறேன் என்று வாங்குபவர் உறுதிமொழி அழிக்க வேண்டும்.

விற்பவரோ பலவிதமான படிவங்கள் வெவ்வேறு துறைகளுக்கும் அதிகாரிகளுக்கும் சமர்ப்பித்தாக வேண்டும். இதற்கு நிறைய நேரமும் செலவும் பிடிக்கும்.

இந்தப் புதிய தடைச்சட்டமானது கால்நடைகள் வெட்டப்படுவதற்கு தடை விதிக்கவில்லை. ஆனால் கால்நடைகள் விற்பனையின் போது விவசாயப் பயன்பாட்டிற்கு மட்டுமே விற்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது.

கால்நடைகள் என்பதில் ஆடு, காளைமாடு, பசுமாடு, எருமை, ஒட்டகம் என நிறைய விலங்குகள் அடங்கும்.

இந்தத் தடைச் சட்டம் மூலமாக கால்நடைகளை விற்பனை செய்யும் சந்தையின் செயல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாவது:

1.   எவரும் கன்றுகளை விற்பனைக்கு அழைத்து வரக்கூடாது.

2.   கால்நடைகளை அவற்றின் உரிமையாளர் அழைத்து வரவில்லையெனில் அவரின் எழுத்து பூர்வமான ஒப்புதல் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

a.   கால்நடைகளின் உரிமையாளரின் பெயர், முகவரி, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

b.   கால்நடைகளின் அடையாள விவரங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

c.   கால்நடைகள் வெட்டுவதற்காக விற்கப்படவில்லை என்ற உறுதிமொழியும் சமர்ப்பிக்க வேண்டும்.

3.   இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விவரங்களும் கோப்புகளாக்கப்பட்டு ஆறு மாத கால அளவுக்கு பாதுகாக்கப்படவேண்டும். ஆய்வாளர் கேட்கும்போது இந்த விவரங்களடங்கிய கோப்புகளின் நகல் கொடுக்கப்பட வேண்டும்.

4.   இவ்வாறு விற்கப்பட்ட கால்நடைகளை விற்பனை மையத்திலிருந்து வெளியே கொண்டு செல்லும் போது

a.   ஒவ்வொரு கால்நடைக்கும் கால்நடைகள் விற்பனை மையக்குழு அங்கீகரித்தபடி உரிய தொகை வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும்.

b.   கால்நடைகள் வெட்டப்படுவதற்காக விற்கப்படவில்லை என்ற உறுதிமொழியை பெற்றிருக்க வேண்டும்.

c.   வாங்குபவரின் பெயர், முகவரி, புகைப்பட்த்துடன் கூடிய அடையாள அட்டையின் நகல் பெறப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

d.   வாங்குபவர் விவசாயி தானா என அவர் வருமானச் சான்றிதழை சோதித்துப் பார்க்க வேண்டும்.

e.   வாங்குபவர் அடுத்த ஆறு மாத கால அளவுக்கு வாங்கிய கால்நடைகளை விற்கமாட்டேன் என்ற உறுதிமொழியை பெற்றிருக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

f.    பெறப்பட்ட அனைத்து தகவல்களையும் ஆறு மாத கால அளவுக்கு பாதுகாத்தல் வேண்டும்.

g.   சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆய்வாளர் கேட்கும் பட்சத்தில் நகலெடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.

5.   கால்நடைகளை வாங்குபவர் செய்ய வேண்டியது:

a.   கால்நடைகளை வெட்டப்படுவதற்காக விற்பனை செய்யக்கூடாது.

b.   மாநில கால்நடை பாதுகாப்புச் சட்ட    த்தின் வரைவின் படி செயல்பட வேண்டும்.

c.   கால்நடையை மதச் சடங்கிற்காக பலி கொடுக்கக்கூடாது.

d.   தன் மாநிலத்தை விட்டு வெளி மாநிலத்தில் உள்ள ஒருவருக்கு விலங்குகள் பாதுகாப்பு நல வாரியத்தின் அனுமதியின்றி விற்பனை செய்தல் கூடாது.

6.   கால்நடைகள் விற்கப்பட்ட பின்னர் விற்பனை மையத்திலிருந்து வெளியேற்றப்படும் முன் விற்பனை செய்யப்பட்டதன் ஆதாரம் ஐந்து நகல்களாக கொடுக்கப்பட வேண்டும். முதல் நகல் விற்பனை செய்தவருக்கும் இரண்டாவது நகல் வாங்கியவருக்கும், மூன்றாவது நகல் விற்பனை செய்தவரின் நகரிலிருக்கும் தாசில்தாருக்கும், நான்காவது நகல் தலைமை கால்நடை அதிகாரிக்கும், ஐந்தாவது நகல் விற்பனை மைய பதிவிற்காகவும் கொடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 11 மாநிலங்களில் பசு, காளை, எருது, கன்று ஆகியவற்றை வெட்டுவதற்கும், அவற்றின் இறைச்சியை உண்பதற்கும் இதுவரை எந்தவிதத் தடையும் இல்லை.

ஆனால், இனிமேல் இந்த சட்ட திருத்தத்தின் காரணமாக ஏழைகள் அவசர தேவைக்காக தங்களிடம் உள்ள மாடுகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் மாட்டை தெய்வமாக வணங்கும் இந்துக்கள்.

ஆனால், உலக நாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.