பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி குடும்பத்தினர்

டில்லி,

நாட்டின் 14வது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றுள்ள புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் விமான பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார்.

தந்தை நாட்டின் முதல் குடிமகனாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதால், நான் எனது பணியை விடமாட்டேன் என்றும், தொடர்ந்து விமான பணிப்பெண்ணாக பணியாற்றுவேன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மகள் சுவாதி கூறி உள்ளார்.

நேற்று புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, அவரது மகளிடம் தங்கள் பணியை விட்டுவிடுவீர்களா  என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

நான் தொடர்ந்து விமான பணிப்பெண்ணாக பணிபுரியவே விரும்புகிறேன். எனது தந்தை நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு வந்து இருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய கடினமாக உழைப்பே காரணம்.

எனது தந்தை எப்போதும் குடும்பத்தினரிடம், அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்கவேண்டும் என்று வலியுறுத்துவார். அதனால்தான் எங்களது குடும்பத்தினர் அனைவருமே இன்று சொந்தக் காலில் நிற்கிறோம். எங்களுக்கென்று தனி அடையாளத்தை கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுவாதி, டில்லியில் உள்ள  கேந்திரிய வித்யாலயாவில் பள்ளி படிப்பையும், பின்னர் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் உளவியல் படித்து பட்டமும் பெற்று தற்போது விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார்.