முதல்வர் தொடங்கி வைத்த புதிய திட்டம்: குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று ஆதார் பதிவு

சென்னை:

குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு வீடு தேடி சென்று ஆதார் பதிவு எடுக்கும் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகம்  செய்து வைத்த முதல்வர், அதற்கான கிட்டை வழங்கினார்.

இந்த திட்டத்தை செயல்படுத்த குழந்தைவளர்ச்சித் திட்ட அலுவலர்களுக்கு  பயிற்சி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர்களிடம், அதற்கான கிட் வழங்கி, திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி,  குழந்தைவளர்ச்சித் திட்டஅலுவலகங்களில் நிரந்தர ஆதார் பதிவு வசதியை ஏற்படுத்தி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பொதுமக்கள் ஆதார் பதிவுசெய்ய 13கோடியே 61இலட்சம் ரூபாய் செலவில் கணினிகள், மடிக்கணினிகள், கைக்கணினிகள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இவற்றை உள்ளடக்கிய ஆயிரத்து 302 ஆதார் கிட்களை 434 குழந்தைவளர்ச்சித் திட்டஅலுவலர்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டத்தைச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.

அடையாளமாக 7 குழந்தைவளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆதார் கிட்களை முதலமைச்சர் வழங்கினார்.

இதன்மூலம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே நேரில்சென்று ஆதார் எண் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்கள் வாழும் ஊரிலேயே முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

குழந்தைவளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் ஆதார் எண் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.