யதார்த்த தீர்வுகளுக்கு சொந்தக்காரர்! நியாயத்தை சீர்தூக்கி பார்ப்பவர்! யார் இந்த பாப்டே?

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வாகி உள்ள எஸ்.ஏ பாப்டே, பணிக்காலங்களில் மிகவும் இயல்பான, நடைமுறைக்கு சரிவரும் விஷயங்களை தான் செய்வார் என்பதால் வழக்கறிஞர்களின் வரமாக பார்க்கப்படுகிறார்.

இந்தியாவின் 47வது தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டு விட்டார். வரும் 18ம் தேதி அந்த பொறுப்பை ஏற்கிறார். அவர் தான் சரத் அர்விந்த் பாப்டே. சுருக்கமாக சொன்னால் அதாவது எஸ்.ஏ. பாப்டே என்றால் எளிதில் புரியும்.

2021ம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி வரை அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார். மத்திய பிரதேச உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாகவும், பல முக்கிய அமர்வுகளில் தம்மை ஐக்கியப்படுத்தி கொண்டவர்.

பாப்டே குடும்பம் வழக்கறிஞர்களால் நிரம்பிய குடும்பம். 1978 ம் ஆண்டு நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்ட படிப்பு முடித்தார். அதே ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தம்மை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

பம்பாய் (இப்போது மும்பை) உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் பயிற்சி பெற்று மூத்த வழக்கறிஞராக நிலைநிறுத்தி கொண்டார். 2000வது ஆண்டில் மார்ச் 29ம் தேதியன்று பாம்பே உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியானார்.

வழக்குகள், நீதிமன்றங்களில் வாதம் என்று சிறப்பாக பணியாற்றி வரும் அவரை, வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் அதிக திறன் மற்றும் எதார்த்தமான, நடைமுறைக்கு ஒவ்வும் தீர்ப்புகளை வழங்கியவர் என்று பெருமையாக கூறுகின்றனர்.

நீதிமன்றங்களில் வழக்கு விவாதங்களின் போது, வாதி மற்றும் பிரதிவாதி என 2 தரப்பினரிடையேயான நியாயத்தை சீர் தூக்கி பார்க்கும் அறிவார்ந்தவர். அதற்கு உதாரணமாக வழக்கறிஞர்கள் குறிப்பிடுவது அயோத்தி வழக்கு விசாரணையைத் தான்.

அரசியலமைப்பு பெஞ்சில், அயோத்தி விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக் கொள்ளலாம் என்ற நகர்வை முன் வைத்தவர். அதற்கு அவர் சொன்ன காரணம், பல ஆண்டுகளாக கசப்புணர்வுகளை தந்த வழக்கு தீர்க்கப்படாமலேயே உள்ளது என்பதே ஆகும்.

அயோத்தி வழக்கை போன்றே பிசிசிஐ வழக்கையும் வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒவ்வொரு முறையும் வழக்குகளில் புதிய, புதிய பிரச்னைகள் முளைத்த போது, அதற்கென தனி நபரை ஒருவரை நியமித்து, வழக்கு விவகாரங்களை விரைவுப்படுத்தினார்.

வழக்கின் அன்றைய நடைமுறைகள் மூலமே, அந்த வழக்கின் அத்தனை அம்சங்களை உற்று நோக்க முடியும் என்பதை அவர் சொல்லி இருக்கிறார் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அதாவது, அயோத்தி வழக்கை தான் அவர் சுட்டிக்காட்டுகிறார், இனி வரும் காலங்களில் முக்கிய வழக்குகளின் போக்கும் இனி அவ்வாறே இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற வரலாற்றிலேயே, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக் குழுவில் இடம்பெற்றவர். அந்த வழக்கை தொடுத்தவர் விசாரணைக்கு ஆஜராகாமல் வாபஸ் பெற, ரஞ்சன் கோகோய்  குற்றமற்றவர் என்று கூறியவர்.

மக்களின் அடிப்படை உரிமைகள், ஆதார் விவகாரம் என முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கியவர் என்ற பெருமை பெற்றவர். தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள எஸ்.ஏ. பாப்டே 2021ம் ஆண்டு ஏப்ரல் 23ல் ஓய்வு பெறுகிறார். அதற்குள் பல முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளில் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று கூறலாம்.