விஜயவாடா: ஆந்திரப் பிரதேசத்திலுள்ள அனைத்துக் கோயில்கள் மற்றும் அறநிலையத்துறை நிறுவனங்களில் உள்ள பொறுப்புகளில் 50% இடங்களை பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இதில் 50% பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சிறப்பு தலைமைச் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1987ம் ஆண்டின் ஆந்திரப் பிரதேச இந்து அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திராவின் விஜயவாடாவிலுள்ள கங்கன துர்கா கோயில், ஸ்ரீசைலத்திலுள்ள மல்லிகார்ஜூனா சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்கள் மற்றும் அறநிலைய அமைப்புகளில் பின்தங்கிய சமூகத்தவர்கள் பங்குபெறும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த அறவிப்பிலிருந்து திருப்பதி தேவஸ்தான கோயிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அங்கே இதர மாநிலத்தவர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்படும் நிலை இருப்பதால் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சாதி மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் கோயில்கள் மற்றும் அறநிலையத்துறை நிறுவனங்களில் அரசின் சார்பில் இடஒதுக்கீடு வழங்குவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில்கள் பாதுகாப்பு கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சி.ரங்கராஜன் ஆந்திர அரசின் இந்த இடஒதுக்கீட்டு அறிவிப்பை வரவேற்றுள்ளார்.