டிசம்பர் 22ந்தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறைய வாய்ப்பு?

டில்லி:

ஜிஎஸ்டி குறித்து ஆலோசனை நடத்த, வரும் 22ந்தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டில்லியில் நடைபெற உள்ளது. இது ஜிஎஸ்டி கவுன்சிலின்  31-வது கூட்டம். இந்த கூட்டத்தில் சில பொருட்களின் வரியை மாற்றி அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2017) ஜூன் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்டது. அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டு 3 மாதத்துக்கு ஒரு முறை ஜிஎஸ்டி குறித்து விவாதிக்கப்பட்டு, வரி ஏற்றம் இறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் வரும் 22-ம் தேதி டில்லியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 முறை நிதித்துறை பொறுப்பு அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்று வந்த நிலையில், நடைபெற உள்ள கூட்டம் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளாக நிதி அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள்.

கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு சில பொருட்களுக்கு வரி விலக்குகள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.‘ தற்போது, 35 பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இவற்றில் பல பொருட்களை குறைவான வரி எல்லைக்குள் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

சில பொருட்கள் 18% வரியிலிருந்து 5% வரிக்கு மாற்றப்படலாம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.