எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் தங்கையான சுதா விஜயகுமாரின் பேரன், வி.ராமச்சந்திரன். இவர் தற்போது “வாட்ஸ்அப்” என்ற படத்தில் நடித்துவருகிறார்.

ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார். இவர்கள் தவிர ‘அஞ்சல்’ மோகன் – ஜீவிதா, அர்ஜுன் – சாட்ரியா , சங்கர் விஜய்  – ரக்ஷிதா, காதல் சுகுமார் – லாலித்தியா  என இன்னும் நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ரஷீத் இயக்க.. ஜே.வி. இசையமைக்கிறார்.

இந்த வருட துவக்கத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், எங்கிருந்தோ வந்த ஒரு தனியார் அமைப்பு தங்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய முனைவதை கண்டு பொங்கி எழுகின்றனர்.

அலங்காநல்லூரில் அவர்கள் போராட்டத்தின் வீச்சு குறைவாக இருக்கவே, போராட்டக்களத்தை சென்னை மெரீனா பீச்சுக்கு மாற்றுகின்றனர்.. அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

வரும் நவம்பர் -15ல் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.

ஆனால் தற்போது இந்த படத்துக்கு பிரச்சினை வருமோ என்று கோடம்பாக்கத்தில் கிலியாகிக்கிடக்கிறார்கள்.

இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் இதுதான்:

“மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் இறுதியில் ரணகளமாக முடிந்தது. காவல்துறை தடியடி, காவல்துறையினர் மீது தாக்குதல் என்றெல்லாம் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தன.

அதன் பிறகு, மெரினாவில் எந்தவித போரட்டமும் நடத்தக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது.

தவிர ஜல்லிக்கட்டு போராட்டம் பல்வேறு அரசியல் விளைவுகளை ஏற்படுத்தின. இப்போராட்டத்தை ஆதரித்து பல கட்சிகள் பேசினாலும், மத்தியில் ஆளும் பாஜக இப்போரட்டத்தை கடுமையாக கண்டித்தது.

அக்கட்சி ஆதரவாளர்கள், “ஆணும் பெண்ணும் ஒரிடத்தில் கூடினால் கூட்டம் வரத்தான் செய்யும்” என்று பேசும் அளவுக்கு அப்போராட்டம் பாஜகவை ஆத்திரப்படுத்தியது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பாஜக அரசின் ஜி.எஸ்.டி. உட்பட சில நடவடிக்கைகளை விமர்சித்த மெர்சல் படத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பயந்துபோன படத்தயாரிப்பாளர், சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் மெர்சல் படத்தின் நாயகன் விஜய், இது குறித்து ஏதும் பேசாமல் மவுனம் காத்து வருகிறார்.

“பெரிய நடிகரான விஜய் நடித்த படத்துக்கே இந்த நிலை என்றால், புதுமுகங்கள் நடிக்கும் படத்தில் ஜல்லிக்கட்டு போராட்ட காட்சிகளை வைத்து “வாட்ஸ்அப்” படத்தை வெளியிட்டுவிட முடியுமா” என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

இது குறித்து படத்தின் இயக்குநர் ரஷீத்திடம் கேட்டோம். அவர், “இல்லை சார்.. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக போராடிய ஆறு பேரின் வாழ்க்கை சம்பவம். ஒரு ஃபன் ஆகத்தான் எடுக்கிறேன். கமர்சியல் மூவிதான். முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு என்பது இல்லை. லவ் சப்ஜக்ட். இதில் யாரையும் தாக்கும்படி.. அதாவது விமர்சிக்கும்படி எந்தக் காட்சியும் இல்லை” என்றார்.எப்படியோ பிரச்சினை ஏற்படாம இருந்தா சரி!