மிரட்டும் கொரோனா: 75நாடுகளில் 94,000 பேர் பாதிப்பு….. உலக சுகாதார அமைப்பு தகவல்

டெல்லி:

லக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், தற்போது 75 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. 94ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு  உள்ளாகி இருப்பதாகவும் கூறி உள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் (கோவிட்19)  கடந்த 3 மாதங்களில் உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் 3019 பேர் பலியான நிலையில், மேலும் 80ஆயிரத்து 409 பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வைரஸ் தாக்கம் குறித்து அதிர்ச்சி அடைந்தது உலக சுகாதார அமைப்பு, அதைத் தொடர்ந்து ஐ.நா.  கொரோனா  வைரஸ் பரவலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக  அறிவித்தது. மேலும், ‘கரோனா வைரஸ்’-க்கு  ‘கொவைட்-19’ என்றும் பெயரிட்டது.

கொரோனாவில் அதிவேக பரவல் உலகநாடுகளை மிரட்டி வருகிறது. இந்த நிலையில், who எனப்படும் உலக சுகாதார அமைப்பு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்ய உலக நாடுகளையும், மக்களையும் அறிவுறுத்தி வருகிறது. மேலும், தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் 75 நாடுகளில் பரவி இருப்பதாகவும், இதனால் 94ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இந்தியாவிலும் 28 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று வருவதாகவும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

தற்போதைய  நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 95,488 பேர் ஆளாகி உள்ளதாகவும், இதுவரை 3,286 பேர் மரணத்தை தழுவி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் கொரோனா பாதிப்பில் இருந்து 53,689 மீண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.