சென்னை:
சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றை தடுக்க, வீடு வீடாக பரிசோதனை செய்யும் அதிரடி நடவடிக்கை நேற்று முதல் துவங்கி உள்ளது. சென்னையில் இப்பணிக்கு, 12 ஆயிரம் பேர் களமிறக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், கடந்தாண்டு மார்ச்சில் துவங்கிய கொரோனா பரவல், மெல்ல மெல்ல அதிகரித்து, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உச்சம் தொட்டது. தினசரி பாதிப்பு, 7,000த்தில் கண்டறியப்பட்ட நிலையில், முழு ஊரடங்கு பலன் அளித்தது.அதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பு குறையத் துவங்கியது.

சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடு வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் தென்படும்போது மருத்துவமனைக்குச் சென்று தொடக்கத்திலேயே பரிசோதனை செய்துக் கொண்டால் உயிரிழப்புகளை தடுப்பதோடு மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதையும் தவிர்க்க முடியும் என்றார்.


இந்நிலையில், தொற்று பரவலை தடுக்கும் வகையில், மெரினா, எலியட்ஸ் கடற்கரை, காசிமேடு மீன் மார்க்கெட் போன்ற இடங்களில், மக்கள் கூட்டத்தை தடுக்க, எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பது தொடர்பாக, மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. அத்துடன், உருமாறிய கொரோனா தொற்று பரவியுள்ளதா என்பதை கண்டறியவும், மருத்துவ ஆராய்ச்சிகளும், மாதிரிகள் பரிசோதனையும் துவங்கி உள்ளது. மேலும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணியருக்கு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. அதன்பிறகே, அவர்கள் பஸ்சில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இருப்பினும் சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் குறிப்பாக தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் அதிகளவில் கொரோனா பரவல் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.