டில்லி

ஜுலை 1 முதல் ஜி எஸ் டி அமுலுக்கு வருவதையொட்டி பல வாணிப மற்றும் இணைய தளங்களில் ஜி எஸ் டி க்கு முந்திய விற்பனை என்னும் பெயரில் பல பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, வியாபாரம் நடக்கிறது.

நாடு முழுவது ஜி எஸ் டி அமுலுக்கு வர இன்னும் 2 நாட்களே உள்ளன.   எந்தப் பொருள் விலை உயரக்கூடும் என்பது இன்னும் பலருக்கு திட்டவட்டமாக தெரியவில்லை.   ஆனால் பல வாணிப நிறுவனக்கள் ஜிஎஸ்டி க்கு முன் தள்ளுபடி விற்பனை என்னும் பெயரில் எல்லாப் பொருட்களையும் விற்றுக் குவிக்கின்றன

உதாரணத்துக்கு பிக் பஜார், தனது வாடிக்கையாளர்களுக்கு ஜுன் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாங்கும் பொருட்களுக்கு 22% வரை டிஸ்கவுண்ட் அளிக்கிறது.  அதே போல ஃப்ளிப்கார்ட் நிறுவனம் நேற்று இரவு முதல் நாளை நடு இரவு வரை வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் புதிய குறைந்த விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.  அமேசான் நிறுவனம் இன்னும் ஒரு படி மேலே போய் அனைத்து எலெக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 40% – 50% டிஸ்கவுண்ட் அளித்துள்ளது.

வேறு சில நிறுவனங்கள் வாங்கும் பொருட்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

இந்த டிஸ்கவுண்டில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களே இவற்றுக்கு மறைமுகமாக விளம்பரதாரராக செயல் படுகிறார்கள்.  மும்பையை சேர்ந்த முகேஷ் சலூஜா தான் ரூ 1 லட்சம் மதிப்புள்ள பொருளை ரூ 60000 ரூபாய்க்கு வாங்கியதை தன் நண்பர்கள் பலருக்கும் தெரிவித்து அவர்களையும் வாங்க வைத்திருப்பதாக ஒப்புக் கொள்கிறார்.

ஒரு சிலர்,  இப்படி விற்பனை செய்யப்படும் பொருட்கள், அநேகமாக பழைய இருப்பை விற்பதற்காக செய்யப்படுவதாகவும் இருக்கக்கூடும் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.  இன்னும் சிலர், விலை அதிகமானால் வியாபாரிகளுக்கு அதிகம் லாபம் இருக்கையில் எப்படி இவ்வாறு குறைந்த விலைக்கு விற்பார்கள் என கேள்விகளை எழுப்புகின்றனர்.

ஒரு சில பொருளாதார நிபுணர்கள், விலை குறையப் போகும் பொருட்களையும் நல்ல விலைக்கு விற்று விட சில வணகர்கள் இவ்வாறு செய்யக்கூடும் என அச்சுறுத்துகின்றனர்.

மொத்தத்தில் பண்டிகை கால தள்ளுபடி விற்பனைக்கு ஈடாக இந்த ப்ரி ஜி எஸ் டி தள்ளுபடி விற்பனை களை கட்டி உள்ளது என்பதே உண்மை