தராபாத்

தராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை இன்று என்கவுண்டர் செய்த அதிகாரி 2008 லும் என்கவுண்டர் செய்துள்ளார்.

கடந்த மாதம் ஐதராபாத் சந்தனப்பள்ளி சுங்கச்சாவடி அருகே பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் இரு சக்கர வாகன டயரை பஞ்சராக்கி உதவி செய்வது போல் நடித்த நால்வர் அவரைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர்   அதன்பிறகு அவரைக் கொன்ற நால்வரும் தீவைத்து எரித்துள்ளனர்.   இந்த வழக்கில் ஆரிஃப், சிவா, நவீன், மற்றும் சென்னகேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த குற்றச் சம்பவத்தை நடத்திக் காட்ட நால்வரையும் காவல்துறையினர் இன்று காலை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்ற போது அவர்கள் காவலரை தாக்கி விட்டு துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு தப்ப முயன்றனர்.   இதில் இரு காவலர்கள் காயம் அடைந்தனர்.  தப்பிய நால்வரையும் காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர்.

சுமார் 11 வருடத்துக்கு முன்பு இதைப்போல ஒரு என்கவுண்டர் சம்பவம் நடந்துள்ளது.  கடந்த 2008 ஆம் ஆண்டு ஸ்வப்னிகா மற்றும் பிரனீதா ஆகிய இருவரும் வாரங்கலில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் பயின்று வந்தனர்.  அப்போது ஸ்ரீனிவாச ராவ் என்பவர் ஸ்வப்னிகாவிடம் காதலைத் தெரிவித்துள்ளார்.   அதை அந்தப்பெண் ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே அவர் தனது கூட்டாளிகளான ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோருடன் இணைந்து இந்த இரு பெண்கள் மீதும் அமிலத்தை வீசி உள்ளனர்.  இந்த வழக்கில் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு மூவரையும் அழைத்துச் சென்றனர்.   இன்று நடந்ததைப் போலவே அப்போதும் குற்றவாளிகள் தப்பிக்க முயலும் போது என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

இதில் மற்றொரு ஒற்றுமை என்னவென்றால் அந்த என்கவுண்டர் நிகழ்வை நடத்திய குழுவில் இடம்பெற்றிருந்த வி சி சஜ்ஜனார் தற்போது இந்த குழுவின் தலைவராக இருந்துள்ளார் என்பதாகும்.