“நான் தோற்றுப்போனதாக யார் சொன்னது? பயனளிக்காத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான்!” – தாமஸ் ஆல்வா எடிசன்
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அழகான கலை! அது கடலளவு ஆழமானதும், பெரியதும் கூட. நாம் வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டிய அளவுக்கு பாடங்கள் இந்தக் கலையில் உள்ளது.
இன்றைய தாய்மார்களின் பொதுவான கனவு தங்கள் குழந்தை கையில் ஒரு தங்கக் கோப்பையைப் பிடித்துக்கொண்டு வாய் நிறைய சிரிப்புடன் தன்னை நோக்கி “மம்மி! என்று கத்திக் கொண்டே ஸ்லோமோஷனில் ஓடி வருவதுதான். அப்பாக்கள் மட்டுமென்ன அவர்களும் அப்படித்தான்! தங்கள் கனவை நிறைவேற்றிகொள்ள அவர்கள் அந்தக் குழந்தையைப் படுத்தியெடுக்கும் பாடுகள் சொல்லி மாளாது!
3chilld
தங்கள் குழந்தையை ஒரு வெற்றியாளானாகப் பார்க்கும் ஆசை யாருக்குத்தான் இருக்காது? இது நிச்சயமாகவே சிறந்த ஆசைதான். ஆனால் அதற்காக நாம் கையாளும் வழிகள் பலன் கொடுக்கக் கூடியவைதானா என்பதை எப்போதாவது ஆராய்ந்திருக்கிறோமா?
தோல்விதான் வெற்றியின் முதற்படி என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். நாமோ நமது குழந்தைகளை அந்த முதல்படியில் ஏறவிடுவதே இல்லை.. ஏனென்றால் அந்த முதற்படி கற்றுக்கொடுக்கும் பாடங்கள் எவ்வளவு விலைமதிப்பற்றவை என்பது நமக்கு தெரிவதில்லை.
நமது பிள்ளை தேர்விலோ, விளையாட்டிலோ தோற்றுவிட்டால் அவர்களை விட நாமே அதிகம் துவண்டு போகிறோம். தோற்றவனை முதுகில் பாசமாய் தட்டிக்கொடுத்து ” இந்தத் தடவை தோத்தா பரவாயில்லை, இது ஒரு அனுபவம்தானே! அடுத்த முறை  நீ கலக்கிருவடா!” என்று சொல்லிப் பாருங்கள். அவனுக்கு அது தன் உடம்பில் புது இரத்தத்தை பாய்ச்சியதுபோல இருக்கும். நாடி நரம்பெல்லாம் முறிக்கேறிவிடும். இதுதான் அனுபவமிக்க குழந்தை வளர்ப்பு!
தோல்வியை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்காத பெற்றோர், பெற்றோராக தோற்றுவிடுகின்றனர். தற்காலிகத் தோல்விகளிலிருந்து காப்பாற்றி, காப்பாற்றி அவர்களை நிரந்தரத் தோல்வி யாளர்களாக ஆக்கி விடுகின்றனர். அவர்கள் முன்னேற்றத்துக்கான கதவு சாத்தப்பட்டிருக்கிறதா? முட்டி மோதட்டும் விடுங்கள் ஒன்று கதவு உடைபடும் இல்லையேல் அவர்கள் உடல் வலுப்படும்.
2chilld
அதெப்படி தோல்வியை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பது? அதன்மூலம் அவர்கள் எப்படி வெற்றி யாளராக மாறமுடியும்?
“இன்னைக்கு ஹோம் ஒர்க்கை முடிச்சியா இல்லியா?” என்று டோரிமான் கார்ட்டூனில் வரும் நோபிட்டாவின் அம்மா போல மகனைத் துரத்தி துரத்தி வரும் அம்மாவா நீங்கள்?
வீட்டுப்பாடத்தை முடிக்காமல் டிமிக்கி அடிக்கும் உங்கள் குட்டி நோபிட்டாவை அப்படியே விட்டு விடுங்கள். அவன் மறுநாள் பள்ளிக்குப் போய் முதுகு வீங்கி திரும்பி வரட்டும். அதன்பின்னர் வீட்டுப்பாடத்தை அன்றைக்கே செய்துமுடிக்கச் சொல்லி நீங்கள் அவனை அறிவுறுத்த வேண்டிய அவசியம் எப்போதுமே இருக்காது.
3child
உங்கள பிள்ளைகள் சாப்பிட்டதைக் கூட சுத்தம் செய்யாமல் தங்கள் அறையை தாறுமாறாகப் போட்டு வைத்திருக்கி றார்களா? அப்படியே விற்றுவிடுங்கள் நீங்கள் தொண்டை வரை கத்தி கற்றுக்கொடுக்கா ததை  இன்னும் கொஞ்ச நேரத்தில் ஊசிப்போகவிருக்கும் அந்த உணவின் நாற்றம் அழகாகக் கற்றுக் கொடுக்கும்.
பிள்ளைகள் செய்ய வேண்டிய ப்ராஜக்டை வீட்டில் அப்பாக்கள் செய்துகொண்டிருப்பதை பார்த்திருப்போம், ஸ்கூல் பிள்ளைகளின் ப்ராஜக்டை விலைக்கு பண்ணிக்கொடுப்பதை சிலர் ஒரு தொழிலாகவே மாற்றிவிட்டார்கள். கொஞ்சம் பிசியான அப்பாக்கள் அந்த ப்ராஜக்டைக் கூட இப்படிப்பட்டவர்களிடம் அவுட்சோர்ஸ் பண்ணிவிடுவார்கள்.  இதை பள்ளிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது அதைவிட முரண்.
ஒரு தாஜ்மகால் செய்துவரச் சொல்லி உங்கள் குழந்தைக்கு ஆசிரியர் ஒரு ப்ராஜெக்ட் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை அவனே செய்யட்டும், அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் சரி? அதனால் அவனுக்கு குறைந்த மதிப்பெண்களே கூட கிடைத்துவிட்டுப் போகட்டுமே! மற்ற பெர்றோர்களுக்குத் தேவை அந்த ப்ராஜெக்டில் தங்கள் பிள்ளைக்குக் கிடைக்கும் மதிப்பெண்களாக இருக்கலாம். ஆனால் உங்களது தேவை உங்கள் மகன் இப்போது ஒரு தாஜ்மகால் செய்ய கற்றுக் கொண்டான். ஒன்றுக்குமே உதவாத அந்த மதிப்பெண் என்னதுக்கு?
சைக்கிள் பழகும்போது உங்கள் பிள்ளை கீழே விழவே கூடாது என்று நீங்கள் நினைத்தால் அவன் ஆயுசுக்கும் சைக்கிள் ஓட்டப்போவதில்லை
அறிஞர் ரால்ஃப் வால்டோ எமர்சன் சொல்வதுபோல, வாழ்வின் மகிமை என்பது விழாமல் இருப்பதில் அல்ல விழும்பொதெல்லாம் எழுவது. எனவே சிறந்த பெற்றோருக்கான அடையாளம் தங்கள் பிள்ளைகளை தோற்க அனுமதிப்பது, அதன்மூலம் அவர்களை அனுபவமிக்க மனிதர்களாக மாற்றுவது. அந்த அனுபவமே அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிக் காட்டும்