டிக்டாக் செயலியை நீக்க கூகுளுக்கு உத்தரவு: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை

டில்லி:

மூக சீரழிவை ஏற்படுத்தி வந்த டிக்டாக் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அகற்றும்படியும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்ச கம்  உத்தரவிட்டு உள்ளது.

சீனாவை அடிப்படையாகக் கொண்ட வீடியோ வகை சமூக வலைதளமான டிக் டாக், உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இந்த மொபைல் ஆப்,  ஆடல், பாடல் மற்றும் நடிப்புத் திறனை வெளிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்து. ஆனால், சமீப காலமாக டிக்டாக் செயலி வீடியோ, ஆபாசத்தின் உச்சக்கட்டமாக அருவெறுப்பான முறையில் அங்க அசைவுகளு டன் கூடிய செயலியாக மாறியும், இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காகவும் உள்ளது.

இளைஞர்கள்  முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் செயலியில் நேரத்தை செலவிடும்  வகையில் அனைவரையும் அடிமைப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், டிக்டாக் செயலியை தடை செய்யவும் கோரிக்கை வலுத்துள்ளது.‘

ஏற்கனவே இந்தோனேசியா டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டிக்டாக் நிறுவனம் அத்துமீறி குழந்தைகளின் ரகசியத் தகவல்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியின்றி பெற்றதாக டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்திருந்தது.

இந்த நிலையில்,  டிக்-டாக் செயலிக்கு எதிராக  மதுரை  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நாட்டில் டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். டிக்-டாக் செயலியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோக்களை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பக் கூடாது. குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் இணையதள சட்டத்தை நம் நாட்டில் அமல்படுத்துவது குறித்து வருகிற 16-ந்தேதி மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிக்-டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது, ஆனால் உச்ச நீதி மன்றம்,  மதுரை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும், ஆப்பிள்  ஆப்-ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை நீக்குமாறு கூறி உள்ளது.

You may have missed